அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சாக்லேட் சாப்பிட்ட 4ம் வகுப்பு மாணவர்கள் 23 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. நெமிலி ஒன்றியம் சைனாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் லோகேஷ் என்ற 4ம் வகுப்பு மாணவர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார். வகுப்பில் உள்ள சக மாணவர்களுக்கு அந்த மாணவர் சாக்லேட் பகிருத்துள்ளார். இந்நிலையில் சாக்லேட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் 23 பேரும் மயக்கம், வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த சுகாதாரத்துறை அலுவலர்கள் பாதிப்புக்குள்ளான குழந்தைகளை பரிசோதித்தனர். மயக்க்கத்தால் பாதிக்கப்பட்ட 2 மாணவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எஞ்சிய மாணவர்கள் யாருக்கும் பெரிய அளவில் உடல் உபாதைகள் ஏற்படவில்லை. காலாவதியான பழைய சாக்லேட்டுகளை சாப்பிட்டதே மாணவர்களின் மயக்கத்திற்கு காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.