பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட்: சென்னையில் செயலியைக் காட்டி பயணிக்கும் புதிய திட்டம்

சென்னை: சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை கொண்டு வர சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் இன்று (நவ.17) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை முழுவதும் பொதுப் போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • சென்னையில் அரசு பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ என மூன்று வகையான போக்குவரத்து முறையை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
  • இதில் அரசு பேருந்துகளில் நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளும் முறைதான் உள்ளது. ரயிலகளில் யூடிஎஸ் செயலி முறையிலும், நேரடியாகவும் டிக்கெட் பெறலாம்.
  • மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய, பயண அட்டை, செயலி மற்றும் நேரடியாக டிக்கெட் பெறும் வசதி உள்ளது.
  • பொதுமக்கள் ஒரே பயணத்தில் இந்த மூன்றிலும் பயணம் செய்ய வேண்டும் என்றால் தனித் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டி உள்ளது. இதற்கு தீர்வு காண ஒருங்கிணைந்த டிக்கெட் முறை அமல்படுத்தப்படவுள்ளது.
  • இதற்கு தனியாக செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
  • இந்த செயலியில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்ய வேண்டும்.
  • அதன்பிறகு எத்தனை போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய போகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • நீங்கள் தேர்வு செய்த முறையின் அடிப்படையில் பயணத்தின் மொத்த தொகை எவ்வளவு என்பது தெரியவரும். அதற்கான தொகையை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
  • இந்த டிக்கெட் மூலம் நீங்கள் தேர்வு செய்த பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்யலாம்.

உதாரணமாக, நீங்கள் வேளச்சேரியில் இருந்து விமான நிலையம் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். இந்த பயணத்தில் வேளச்சேரியில் இருந்து மத்திய கைலாஷ் வரை பறக்கும் ரயில், மத்திய கைலாஷ் முதல் கிண்டி வரை பேருந்து, கிண்டியில் இருந்து விமான நிலையம் வரை மெட்ரோ என்று மூன்று வகையான பொதுப் போக்குவரத்துகளில் ஒரே டிக்கெட் கொண்டு பயணம் செய்யலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.