கர்னூல்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்னூல் மாவட்டத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திறந்தவெளி வேனில் சென்றபடி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். கர்னூல் மாவட்டம் ஆதோனியில் நேற்று அவர் பேசியதாவது:
ஆந்திராவில் விலைவாசி, வரி அதிகரித்து விட்டது. போலி மதுபான விற்பனையால் ஏழைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள். தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றன. ஆந்திராவில் அரசியல் காழ்ப்புணர்வால், அனைத்து அண்ணா கேன்டீன்களும் மூடப்பட்டுவிட்டன ஆனால், தமிழகத்தில் அம்மா உணவகம், ஆட்சி மாறினாலும் தொடர்கிறது.
வரும் 2024-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்யுங்கள். மீண்டும் முதல்வராக ஆட்சி செய்து மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறேன். அப்படி வெற்றி பெறாவிட்டால் அரசியலுக்கே முழுக்கு போட்டு விடுவேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.