திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திண்டுக்கல்லில் 69வது கூட்டுறவு வார விழா நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று பயனாளிகளுக்கு ரூ.33.25 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:
இந்தியாவில் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பொது விநியோக திட்ட முறைகளை பார்வையிட்டு சென்ற ஒன்றிய அமைச்சர்கள், தமிழகத்தில் ரேஷன் கடைகளின் செயல்பாட்டை பாராட்டி, சான்றிதழ் வழங்கியுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் சுயஉதவிக்குழு கடன்கள், நகை கடன்கள், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக மகளிர் சுயஉதவிக்குழு கடன் ரூ.2,755 கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.10,292 கோடி மதிப்பிலான விவசாய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு கடன் சங்கங்களில் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான விவசாய கடனுதவிகளை பெற நகை அடமானம் வைக்க தேவையில்லை. கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு கூறினார்.