புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தனிநபர் மனு ஒன்றை விசாரணைக்கு எடுத்தது. அப்போது மனுதாரரான சங்கர் லால் சர்மா என்பவர், அவரது தரப்பு கோரிக்கையை இந்தியில் வாதங்களாக முன்வைத்தார். தனது பிரச்னைகள் குறித்து பல நீதிமன்றங்களை நாடிய பின்னர் எங்கும் தீர்வு கிடைக்காத காரணத்தினால் தான் உச்ச நீதிமன்றத்தை நாடியதாக அவர் நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘உச்ச நீதிமன்றத்தை பொருத்தமட்டில் வழக்காடு மொழி ஆங்கிலம் தான். இந்தியில் வாதங்களை முன்வைக்க வேண்டாம்’’ என மனுதாரரிடம் ஆங்கிலத்தில் கூறினர். ஆனால் மனுதாரர் சங்கர் லால் சர்மாவுக்கு நீதிபதிகள் கூறியது புரியாமல் இருந்ததால், அருகில் இருந்த மற்ற வழக்கறிஞர்கள் இந்தியில் மொழிபெயர்த்தனர். அப்போது மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘உங்களது வழக்கை விசாரிக்க நாங்களே ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்கிறோம்’’ என தெரிவித்தனர். அதற்கு மனுதாரரும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ஒரு வழக்கறிஞரை நியமித்த நீதிபதிகள், ‘‘சங்கர் லால் சர்மா மனு குறித்து ஆய்வு செய்து விவரங்களை தாக்கல் செய்யுங்கள்’’ என உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.