திருமலை: திருப்பதியில் அதிகாலையில் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீயால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுன்தினம் புறப்பட்டது. நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், திருப்பதி மாவட்டம் கூடூர் ரயில் நிலைய சந்திப்பு இடையே வந்தது. அப்போது, ரயிலில் உள்ள பேன்ட்ரி(சமையல் செய்யும்) பெட்டியில் பயணிகளுக்கு தேவையான காலை உணவு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இந்த பெட்டியில் திடீரென தீப்பற்றி புகை பரவியது. ஊழியர்கள் மற்றும் பக்கத்து பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், கூடூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள், பேன்ட்ரி பெட்டியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைத்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. இதனால், 1 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் சென்னை சென்ட்ரலுக்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்று சேர வேண்டிய ரயில் 2 மணிநேரம் தாமதமாக காலை 7 மணிக்கு சென்று சேர்ந்தது.