ஸ்ரீநகர்: கடந்த 1932-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியை ஷேக் அப்துல்லா தொடங்கினார். கடந்த 1981-ம் ஆண்டு வரை அவர் கட்சியின் தலைவராக நீடித்தார். அதன் பிறகு அவரது மகன் பரூக் அப்துல்லா கட்சியின் தலைவராகப் பதவியேற்றார். கடந்த 2002-ம் ஆண்டில் பரூக்கின் மகன் ஒமர் அப்துல்லா கட்சித் தலைவராகப் பதவியேற்றார். கடந்த 2009-ம் ஆண்டில் பரூக் அப்துல்லா மீண்டும் கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார். தற்போது 85 வயதாகும் அவர், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சித் தலைவர் பதவியில் இருந்து நேற்று விலகினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளேன். கட்சித் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறும்” என்றார்.
இதுதொடர்பாக தேசிய மாநாடு கட்சி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கட்சி விதிகளின்படி வரும் டிசம்பர் 5-ம் தேதி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். அதுவரை பரூக் அப்துல்லா தலைவராக பொறுப்பு வகிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமர் அப்துல்லா தற்போது கட்சியின் துணைத் தலைவராக உள்ளார். அடுத்த தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.