இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: புறப்பட்ட 2.5 நிமிடத்தில் இலக்கை எட்டி சாதனை

சென்னை: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆய்வில்உலகளவில் முன்னணி அமைப்பாக திகழ்கிறது. உலகளாவிய விண்வெளிவர்த்தகப் போட்டியை சமாளிப்பதற்காக இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

அதன்ஒரு பகுதியாக, விண்வெளி ஆய்வில்தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இஸ்ரோ முடிவுசெய்தது. இதற்காக 2020-ம் ஆண்டு ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம் ராக்கெட்,செயற்கைக் கோள் தயாரித்தல் ஆகியபணிகளில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன.

அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து, புதிய ராக்கெட் தயாரிப்பு பணிகளில் கடந்த 2 ஆண்டுகளாக ஸ்கைரூட் ஈடுபட்டு வந்தது. தொடர்ந்து, வெவ்வேறு எடைகளை சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ராக்கெட்கள் ஸ்கைரூட் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டன.

அதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது. அதில் சிறிய ரக 545 கிலோ எடை கொண்ட ‘விக்ரம்-எஸ்’ ராக்கெட்டை சோதனை முயற்சியாக விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 15-ம் தேதி ராக்கெட் ஏவுதலுக்கு தயாரான நிலையில், மோசமான வானிலையால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மைய ஏவுதளத்தில் இருந்து விக்ரம்-எஸ் ராக்கெட் நேற்று காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

தரையில் இருந்து புறப்பட்ட 2.5 நிமிடத்தில், திட்டமிட்டபடி 82 கி.மீ உயரத்தை எட்டிய ராக்கெட், பின்னர் மெல்ல வேகம் குறைந்து அடுத்த சில நிமிடங்களில் கடலில் விழுந்தது. ஒட்டுமொத்தமாக விக்ரம் ராக்கெட்டின் பயணம் நேரம் 4.8 நிமிடமாகும்.

இந்த ஏவுதலின்போது புறக்காரணிகளால் ஏற்படும் அழுத்தம் உள்ளிட்ட காரணிகளை ஆராய்வதற்காக விக்ரம் ராக்கெட் உடன் 83 கிலோ எடை கொண்ட 3 ஆய்வு சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவை ஆந்திராவை சேர்ந்த என் ஸ்பேஸ் டெக் இந்தியா, சென்னையின் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா மற்றும் ஆர்மேனியன் பசூம் க்யூ ஸ்பேஸ்ரிசர்ச் லேப் ஆகிய ஸ்டார்ட்-அப்நிறுவனங்களுக்கு சொந்தமானவை.

விக்ரம்-எஸ் ராக்கெட் 6 மீட்டர் உயரம் கொண்டது. அதிகபட்சமாக 80 முதல்100 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடியது. இதில் கலாம்-80 என்ற உந்துவிசை இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த ஒட்டுமொத்த திட்டத்துக்கு ஸ்கைரூட் நிறுவனம் முதலீடுகள் வாயிலாக ரூ.403 கோடி நிதியுதவி பெற்றுள்ளது. தொடர்ந்து, பல்வேறு தனியார் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தயாரித்த ராக்கெட்களை விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.