நடிகர், நடிகைகள் தங்களின் காதல் உறவு குறித்தும், திருமணம் உறவு குறித்தும் ரசிகர்களுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிய வேண்டாம் என்றே பெரும்பாலும் நினைப்பார்கள். மேலும், அது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்பதால் வெளிநபர்கள் யாரும் அதில் மூக்கை நுழைக்கவும் முடியாது.
ஆனால், ரசிகர்களுக்கோ அவர்கள் உறவு மட்டுமின்றி அவர்கள் வைத்திருக்கும் வாட்சில் இருந்து இருக்கும் வீடு வரை அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என ஆர்வம் மேலோங்கி இருக்கும். அப்படிதான், பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷனின் காதல் விவகாரம் என்றாலே ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகர்களும் ஆர்வமாகிவிடுகின்றனர்.
இந்நிலையில், தற்போது ஹிர்திக் ரேஷன், சபா ஆஷாத் என்ற பெண்ணை காதலித்துவரும் நிலையில், அவர்கள் தங்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையின் மன்னாட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், ஹிர்திக் – சபா ஆசாத் ஜோடி தனியாக வசிக்க போவதாக கூறப்படுகிறது. எனவே, அந்த பகுதியில் உள்ள மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பை இந்த ஜோடி தற்போது புதுபித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இதைவிட அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்புதான் அனைவரையும் வாயை பிளக்கவைத்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. 3 மாடிகளை கொண்ட இரண்டு குடியிருப்புகளை ஹிர்திக் வாங்கியுள்ளதாகவும், 38 ஆயிரம் சதுர அடி பரப்பிலான அந்த குடியிருப்பை சுமார் ரூ.97.5 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிர்திக் – சபா ஆசாத் ஜோடி மும்பையின் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இணைந்து செல்கின்றனர். ஹிர்திக்கின் உறவினர் பஷ்மினா ரோஷனின் பிறந்தநாள் விழாவில் சபாவும் பங்கேற்றிருந்தார். சபா ஆசாத் தற்போது, ராக்கெட் பாய்ஸ் தொடரின் சீசன் 2 படப்பிடிப்பில் உள்ளார். அதே கையுடன் அதன் பிரமோஷன் வேலைகளிலும் ஈடுபட உள்ளார். தொடர்ந்து, அவர் நடிப்பில் உருவான மினிமம் என்ற படத்தில் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். அதன் பிரமோஷன் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்தி விக்ரம் வேதா வெற்றியை அடுத்து, ஹிர்திக் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். ரசிகர்கள் இந்த பெரும் வரவேற்பை அடுத்து, அவர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஃபைட்டர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.