திருவனந்தபுரம்: சபரிமலையில் இன்று கட்டுக்கடங்காத அளவில் பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் 8 மணி நேரத்திற்கும் மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்தனர். கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 17ம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த இரு வருடங்களுக்குப் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டதால் நடைதிறந்த 16ம் தேதி மாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் நேற்று இரவு முதலே சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால் நேற்று இரவில் 18ம் படி முன் தொடங்கிய பக்தர்களின் நீண்ட வரிசை இன்றும் தொடர்கிறது. இன்று கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுவதால் பக்தர்கள் 8 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.
நெய்யபிஷேகம் செய்வதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, பழனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் தமிழக பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் மண்டல, மகர விளக்கு காலங்களில் காலையிலும், மாலையிலும் 4 மணிக்குத் தான் நடை திறக்கப்பட்டு வந்தது.
ஆனால் இவ்வருடம் பக்தர்களின் வருகை அதிகரித்ததை தொடர்ந்து மண்டல காலத்தின் முதல் நாளிலிருந்தே அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு வருகிறது. பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் நடை சாத்தப்பட்டு 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. இதன்பின் இரவு 11 மணிக்குத் தான் நடை சாத்தப்படும். தினமும் சுமார் 18 மணி நேரம் நடை திறந்திருப்பதால் பக்தர்கள் கடும்கூட்ட நெரிசலிலும் சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.