நியூயார்க்-ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பானை நியமிக்க, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐ.நா.,வின் மிக உயரிய குழுவான ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ௧௫ உறுப்பு நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன.
தற்போது பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா உள்ளது. இந்த இரண்டாண்டு பதவிக் காலம், அடுத்த மாதத்துடன் முடிகிறது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்தி, சீர்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது.
குறிப்பாக, இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பானை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பாதுகாப்பு கவுன்சிலில் மாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம், நியூயார்க்கில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், இந்தியா, ஜெர்மனி, பிரேசில், ஜப்பானை நிரந்தர உறுப்பினராக்க வலியுறுத்தியுள்ளன.
![]() |
இதைத் தவிர, ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றை நிரந்தர உறுப்பினராக்கவும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில், சீனாவைத் தவிர மற்ற நான்கு நாடுகளும், இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்