ஊட்டி: தமிழக அரசின் இணைவோம், மகிழ்வோம் சிறப்பு பேரணி கோத்தகிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து குழந்தைகளும் தரமான கல்வி பெறுவதை உறுதி செய்யும் நோக்குடன், உள்ளடக்கிய கல்வியையும் வழங்கி வருகிறது. தனிநபர் கல்வித் திட்டம் மூலம் அவரவர் நிலைக்கேற்ற இலக்கை வடிவமைத்து சிறப்பு கல்வி அளித்தும், அவர்கள் முன்னேற்றத்தினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அலுவலருமான தாமோதரன் ஆணைப்படியும், உதவித் திட்ட அலுவலர் குமார் வழிகாட்டுதல் படியும், கோத்தகிரி வட்டார வளமையம் சார்பில், மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிதல், அவர்களை பள்ளிகளில் சேர்த்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமையாசிரியர் அமீலியா தலைமை வகித்தார். ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் ரமேஷ், வட்டார வள மையம் பொறுப்பு மேற்பார்வையாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர்.
பள்ளியில் துவங்கிய பேரணி நகரின் ராம்சந்த், காமராஜர் சதுக்கம், சந்தை, கடைவீதி, பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் வழியாக பள்ளியை மீண்டும் வந்து அடைந்தது. அதேபோல் கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை சத்யபாமா தலைமையில் பேரணி நடந்தது. இந்த பேரணி கீழ் கோத்தகிரி பஜார், அண்ணா நகர், கோக்கால் ஆகிய வழிகளில் சென்றடைந்தது. முடிவில் பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேனீர் பிஸ்கட் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கான‘இணைவோம், மகிழ்வோம்”என்ற நிகழ்ச்சி அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்றது.
இதில் மாணவர்கள் பல்வேறு விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பினர். மேலும் மாற்றுத்திறன் மாணவர்களை பற்றிய கருத்துக்களை சக மாணவர்கள் பதிவிட்டனர். இதில், ஆசிரியர் பயிற்றுநர்கள் அருண்குமார், சத்யா, சிறப்பு பயிற்றுனர்கள் ரவி, மங்கள வள்ளி, மீனா, இயன்முறை மருத்துவர் திவ்யா, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், ஹேரி உத்தம் சிங் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.