தமிழகத்தில் கடந்த சில நாள்களாகப் பெரிய அளவில் மழை பதிவாகாத நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றதையடுத்து, நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்தப் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நவம்பர் 23-ம் தேதியன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்று வீசுமென்பதால், நவம்பர் 23-ம் தேதிவரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் மழை பதிவாகவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.