நெல்லை மாவட்டம், நடுக்கல்லூரைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் இரவு நேரத்தில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியபோது பைக்கில் பின்தொடர்ந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். கொலையாளிகளைக் கைதுசெய்யக் கோரி, நம்பிராஜனின் உறவினர்களும் கிராமத்தினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தென் மண்டல ஐ.ஜி-யான ஆஸ்ரா கர்க் நெல்லைக்கு வருகை தந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அத்துடன், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், நெல்லை சரக டி.ஐ.ஜி ப்ரவேஷ் குமார் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
அந்தக் கூட்டத்தில், சாதிய வன்முறைகள், கொலைகள் போன்ற சட்டவிரோதச் செயல்களை முன்னெச்சரிக்கையாகத் தடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, தென்மண்டல ஐ.ஜி-யான ஆஸ்ரா கர்க், “ தென் மாவட்டங்களில் நடக்கும் சாதிய குற்றங்களைத் தடுக்கும் வகையில் தென் மாவட்டத்தின் டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி-கள் தலைமையில் சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில், நெல்லை மாவட்டத்தில் மட்டும் 204 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை, 184 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகியிருக்கிறார்கள். குற்றப்பிணை ஆணையை மீறி செயல்பட்டதாக கடந்த ஆண்டில் 985 பேர் கைதுசெய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தென் மாவட்டங்களில் நடைபெறும் சாதிய விழாக்களின்போது சிறிய அளவில்கூட வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் முன்னெச்சரிக்கையுடன் தென் மாவட்ட காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. இந்தப் பகுதிகளில் சாதிய பிரச்னைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

தென் மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் 16 கோடி ரூபாய் அளவுக்கான வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. அதனால் கஞ்சா புழக்கத்தை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் கடந்த காலங்களில் சாதிய மோதல்களில் ஈடுபட்டு அதற்காக சிறை சென்று திரும்பியவர்கள் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அவர்களைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி அவர்கள் தவறு செய்தால் கைதுசெய்வதுடன் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் செயல்களில் சிறார்கள் ஈடுபட்டாலும் நீதிமன்றம் மூலம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆஸ்ரா கர்க் தெரிவித்தார்.