புட்டபர்த்தி: 2025ல் சத்யசாய் பாபா பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவோம் என, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் சத்ய சாய்பாபாவின் 97வது பிறந்தநாள் விழா இன்று (நவ.,23) கொண்டாடப்பட்டது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் வெண்ணிற ஆடை அணிந்து கடல் போல் காட்சி அளித்தனர்.
நகரம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குல்வந்த் அரங்கில் இன்று காலை நடந்த சத்ய சாய்பாபாவின் பிறந்தநாள் விழாவில், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:
நான் மத்திய அமைச்சராக இங்கு வரவில்லை. பகவான் சத்ய சாய்பாபாவின் பக்தனாக வந்துள்ளேன். ஹிந்து மதத்தை கட்டி காத்த சத்ய சாய்பாபா, ஏழைகள் நலனிலும் அக்கறை செலுத்தி சமூக பொருளாதார ரீதியில் அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றினார். அவர் வகுத்து தந்த வழியில் தான் பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அரசும் செயல்படுகிறது. முன்னாள் துணை பிரதமர் அத்வானியுடன் சாய்பாபா பிறந்தநாள் விழாவிற்கு ஏற்கெனவே வாழ்ந்துள்ளேன். ஏழைகளின் கஷ்டத்தை நீக்கி அதனை தீர்த்து வைத்து தந்தையாக விளங்கினார்.

புட்டபர்த்தி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் குடிநீர் என்று தவித்த போது, கிருஷ்ணா நதிநீரை வரவழைத்த பெருமை பகவானையே சாரும். இது ஒரு பெரிய பணி, அற்புதப் பணி. அரசு செய்ய வேண்டிய பணியை அவர் செய்து காட்டினார்.
ஆந்திரா, தெலுங்கானாவில் முக்கிய கோவில்கள் மேம்படுத்தப்படும். யாருமே நினைத்து பார்க்க கூட முடியாத சாதனையை பகவான் நிகழ்த்தினார். ஏழை குழந்தைகளின் இதயம் சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்ய தனி மருத்துவமனை அமைத்தார்.

இரண்டு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏழைகள் பலவிதமான சிகிச்சைகள் பெற்று நலமுடன் வாழ்கிறார்கள். இவரது சுகாதார சேவையை பார்த்து தான் ஆந்திரா, தெலுங்கானாவில் ஆரோக்கிய ஸ்ரீ என்ற சுகாதார திட்டம் கொண்டுவரப்பட்டது.
சத்ய சாய்பாபா என்றால் ஏழைகள் வாழ்வில் ஒளி ஏற்றிய வெளிச்சம், தன்னம்பிக்கை, தைரியம், கடவுள், பக்தி, தந்தை, சாந்தி, உணவளித்த மகான். இவ்வுலகில் சூரியன் சந்திரன் இருக்கும் வரை, பகவான் சத்திய சாய்பாபாவின் புகழ் நிலைத்து நிற்கும்.

அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா, 2025ல் ஆண்டு முழுவதும் கோலாகலமாக கொண்டாடுவோம். நாம் அனைவரும் அவர் வகுத்துக் கொடுத்த வழியை கடைபிடித்து சேவை மனப்பான்மையுடன் செயல்படுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சத்ய சாய்பாபா பிறந்தநாள் விழாவையொட்டி கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. உயர்நிலை, இடைநிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில், 4.10 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
விழாவில், கட்டுரைப் போட்டியில் வென்ற 23 மாணவ, மாணவியருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. தமிழகத்தின் ஆறு மாணவியரும் பதக்கம் பெற்றனர்.

சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவுக்காக, 2025 வரை நாடு முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி புட்டபர்த்தியில் இன்று துவக்கி வைத்தார். சத்ய சாய்பாபாவின் பிருந்தாவனம் வண்ண வண்ண மலர்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழா நடந்த குல்வந்த் அரங்கம் வண்ணமயமாக காட்சியளித்தது.

நேற்று முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்தனர். அனைவருக்கும் இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
மாணவ மாணவியரின் இசை நிகழ்ச்சி, சத்ய சாய்பாபாவின் வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டது. இறுதியில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நேற்று மாலை ஊஞ்சல் சேவையும், தேரோட்டமும் நடந்தன. சத்ய சாய்பாபா மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாக்கர், உட்பட அறங்காவலர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்