ஆன்லைன் மோசடிகளில் சிக்கி பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், வங்கிகளில் மேற்கொள்ளப்படும் மின்னணுப் பரிவர்த்தனை குறித்து கிராம மக்களிடையே மாதந்தோறும் 2 விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கடந்த 2016 நவ.8-ம்தேதி அறிவித்தது. அதற்குப் பிறகு, மின்னணு (டிஜிட்டல்) பரிவர்த்தனையை அதிக அளவில் ஊக்குவித்து வருகிறது. ஆனால், கிராமப்புற மக்களிடம் வங்கிகளில் மேற்கொள்ளப்படும் மின்னணுப் பரிவர்த்தனைகள் குறித்து இன்னும் போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை.
குறிப்பாக, டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தல், வங்கி இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள், குறிப்பாக, ஆர்டிஜிஎஸ், என்இஎஃப்டி மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள், செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை குறித்து கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக் களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில், கிராமப் பகுதிகளில் நிதி கல்வியறிவு மற்றும் கடன் ஆலோசனை மையங்களை அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு, பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொண்ட பிறகு, தற்போது மின்னணு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அதிகளவில் ஊக்குவித்து வருகிறது. மின்னணு பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் கிராமப்புற மக்கள் இன்னும் இதை முழுமையாக பயன்படுத்துவதில்லை. மேலும், ஆன்லைன் மோசடிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
எனவே, இத்தகைய மோசடிகளைத் தடுத்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கிராமப் பகுதிகளில் ஆலோசனை மையங்களை அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதை ஏற்று, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை 65 நிதி கல்வியறிவு மற்றும் கடன் ஆலோசனை மையங்களை அமைத்துள்ளன. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, தமிழ்நாடு கிராம வங்கி 28 மையங்களை நிறுவியுள்ளது. மாதந்தோறும் கட்டாயம் 2 முகாம்களை நடத்தி, வங்கி மின்னணு பரிவர்த்தனைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக, விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்காக, இந்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், இந்த விழிப்புணர்வு முகாம் சரியாக நடத்தப்படுவதில்லை என்று புகார் எழுந்ததையடுத்து, மாதந்தோறும் கட்டாயம் 2 விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.