Exclusive: “எங்கள் கூட்டணியினருடன் பல விஷயங்களில் முரண்படுகிறோம்…” – கே.எஸ்.அழகிரி பளிச்

`காங்கிரஸ் உட்கட்சி பூசல்கள் பற்றி வேண்டாம்…’ என்கிற நிபந்தனையோடு பேச தொடங்கிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் நடப்பு அரசியல் குறித்து, அவரின் சென்னை இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்.

“கலைஞர், ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது. அதை சரியாக பயன்படுத்தினால் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க முடியும்’ என்கிறார் அமித் ஷா. அதுபோல் தேசிய கட்சியான காங்கிரஸ் எந்த முன்னெடுப்பும் எடுக்கவில்லையா?”

“’தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது’ என்று அமித் ஷா சொல்வது தவறான கருத்து. ஒர் அரசியல் கட்சித் தலைவராக ஒரு மாநிலத்திற்கு வந்தால் அவருடைய கட்சிக்காரர்களுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடிய வார்த்தைகள்தன் அது. தி.முக-வில் கலைஞருக்கு பிறகு அந்த இடத்தை ஸ்டாலின் ஒரு வலிமையான தலைவராக, சிறந்த முதலமைச்சரா உருபெற்றிருக்கிறார். அமித் ஷா கூறியது அ.தி.மு.க-வுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஏனென்றால் ஜெயலலிதா,எம்.ஜி.ஆர்-க்கு இணையாக அங்கு ஓர் தலைமை உருவாகவில்லை. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தியின் தலைமை தமிழக மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. நாங்களும் அவரின் தலைமையை மேம்படுத்துகிறோம். கட்சியில் முதல் முறையாக பொதுக்குழு உறுப்பினர்கள் ஏறக்குறைய 380-க்கும் மேல் மெரிட்டில் மின்னணு முறையில் உறுப்பினர் சேர்க்கை அடிப்படையில் வந்திருக்கிறார்கள்”

அமித் ஷா

“இதுபோல் மின்னணு முறைக்கு காங்கிரஸ் கட்சியிலேயே எதிர்ப்பு இருக்கிறதே?”

“இல்லை இது தவறான விமர்சனம். ஏறக்குறைய 55 ஆண்டுகளாக காங்கிரஸில் இருக்கிறேன். ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு புத்தகத்தில் எழுதுவதுதான் ஏமாற்று வேலையாக பார்க்கிறேன். ஏனெனில் இந்த முறையில் நேரடியாக, ‘நான் காங்கிரஸ் கட்சியில் சேருகிறேன்’ என்று அவர்கள் சொல்வதை வீடியோ எடுக்க வேண்டும். அவர்களுடைய ஆதார் எண், மொபைலில் எண், முகவரி எல்லாம் குறிக்க வேண்டும். எனவே அதில் தவறே நிகழாது”

“தமிழகத்தில் பா.ஜ.க பிசாசு போல் வளர்ந்து வருகிறது’ என்று உங்கள் கூட்டணி கட்சியின் மூத்த தலைவர் சொல்கிறாரே… அது போல் காங்கிரஸ் வளர்ச்சிக்கு மாநில தலைவராக ஏதும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?”

“நாங்கள் பிசாசு போல் வளர முடியாது… நல்ல முறையில்தான் வளர முடியும். துரைமுருகன் அவர்கள் நக்கலாக பேசக்கூடியவர். வேறு விஷயத்தில் ஏதாவது பேசியிருப்பார். ஆளுகின்ற கட்சி ஒரு கூட்டம் போட்டால் செலவு செய்து கூட்டத்தை அழைத்து வருகிறார்கள். அதை வைத்துக்கொண்டு அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது. தேர்தலில் 23 தொகுதிகளில் நின்றார்கள். நான்கு தொகுதியில் தானே ஜெயித்தார்கள். இன்றைய தலைவரும் வெற்றி பெறவில்லை. அன்றைய தலைவரும் வெற்றி பெறவில்லை. அப்படி இருக்கும் போது இதில் என்ன வளர்ச்சி”

கார்த்தி சிதம்பரம்

“காங்கிரஸ் கட்சியில் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி கொள்ளும் அளவிற்கு தகுதியானவர்கள் யாருமில்லை’ என்கிறாரே கார்த்தி சிதம்பரம்…?”

“வருகிற போது அது தானாக வரும். அரசியல் கட்சியின் வாய்ப்பு என்பது அந்த சூழலை பொறுத்துதான். 50 ஆண்டுகள் நாங்கள் ஆட்சியில் இல்லை என்றாலும் இயக்கம் உயிரோட்டமாக இருக்கிறது. எந்த ஊருக்கு போனாலும் எங்களுடைய கிளைகள் இருக்கின்றன. இன்றைக்கும் காங்கிரஸ் ஒரு வலிமையான அரசியல் கட்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே முதல்வருக்கான தேவை வரும்போது எல்லாம் வருவார்கள்”

“தமிழகத்தில் மக்கள் நல பிரச்னைகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் நேரடியாக சென்று அணுகுவதில்லை என்கிற வாதத்தை எப்படி பார்க்கிறீர்கள்?”

“இதெல்லாம் தவறு… நாங்கள் நிறைய விஷயங்களில் கலந்து கொள்கிறோம், போராடுகிறோம், செயல்படுகிறோம். ஊடகங்களுக்கும், விமர்சனம் செய்கிறவர்களுக்கும் எளிதாக கிடைக்கிற இரை காங்கிரஸ் என்பதால் இது போன்ற விமர்சனங்கள் வருகின்றன.”

ராகுல் காந்தி நடைப்பயணம்

“தி.மு.க உடனான காங்கிரஸ் கூட்டணி திருப்திகரமாக இருக்கிறதா?”

“அதில் என்ன சந்தேகம்… திருப்திகரமாகதான் இருக்கிறது…”

கே.எஸ். அழகிரி

“அப்புறம் ஏன் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் ஏகப்பட்ட முரண்கள் இருக்கிறது என்று சொல்லி இருந்தீர்கள்?”

“அது முரண்பாடு கிடையாது… காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எங்களது கூட்டணிக் கட்சிகள் அனைவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை அனைத்து அரசியல் கட்சிகளும், எங்கள் கூட்டணியில் இருப்பவர்களும் ஏற்றுக் கொள்ள முடியாது. உதாரணமாக தாராளமயமாக்குவதையும், உலக வர்த்தகத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ். ஆனால், பொதுவுடமை இயக்கங்கள் இதை வன்மையாக எதிர்க்கிறார்கள். இருந்தாலும் நாங்களும் அவர்களும் ஒரே கூட்டணியில் இருக்கிறோம். அதேபோல் தி.மு.க உடன் பேரறிவாளன் விடுதலை, இடஒதுக்கீடு என பல விஷயங்களில் முரண்படுகிறோம். நாங்கள் எல்லாம் ஒன்று சேர்வது மதசார்பின்மை என்கிற ஒரு நேர்கோட்டில்”

“ஆனால், மதசார்பின்மை என்கிற விஷயத்தில் சறுக்கியதால் தான் காங்கிரஸுக்கு பல இடங்களில் பின்னடைவு என்கிறார்களே?”

“மதசார்பின்மைகளையே இரண்டு விதம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி நாத்திக கட்சி அல்ல, கடவுள் மறுப்பு சொல்கிற கட்சியும் இல்லை. இதை பல பேர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். ஆனால், மதத்தின் பெயரால் அரசியல் செய்யக்கூடாது என்று சொல்கிறோம். “நான் ஒரு உண்மையான இந்து. நான் ஸ்ரீ ராமபிரான் கட்டளை பிரகாரம் வாழ்கிறேன். நடக்கிறேன். அவரின் வார்த்தைகளே என் வழிகாட்டி. இவைகள் எல்லாம் எனக்குத்தான். எனது பக்கத்து வீட்டுக்காரர் மீது இதை நான் திணிக்க மாட்டேன்” என்று மதசார்பின்மைக்கு காந்தியடிகள் சரியான பதில் சொல்லி இருக்கிறார். அதை புறம் தள்ளி இன்று ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே இறை வழிபாடு என்று திணிப்பதை எதிர்க்கிறது காங்கிரஸ். எனவே எங்கள் மீது குறை சொல்ல வேண்டும் என்று சொல்கிறவர்கள் சொல்வார்கள்”

ஸ்டாலின் – கே.எஸ்.அழகிரி

“கூட்டணியில் இருப்பதால் ஆளும் அரசை விமர்சிக்க முடிகிறதா?”

“கண்ணை மூடிக்கொண்டு ஒரு அரசாங்கத்தை எதிர்ப்பது தேவையில்லாதது.10% இட ஒதுக்கீடு, மின் கட்டண உயர்வு போன்ற விஷயங்களில் காங்கிரஸ் மறுப்பு தெரிவித்திருக்கிறது. எனவே அவ்வளவுதான் செய்யலாம்…”

திமுக கூட்டணி

“வெறும் அறிக்கையோடு நின்றுவிடலாமா?”

“அறிக்கையே போதுமே… தோழமைக் கட்சியின் அரசை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது”

“அப்போது உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கன பொறுப்பு…?”

“நாங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்துதானே வாக்கு கேட்டோம். தேவையான விஷயங்களில் அரசிடம் எடுத்து சொல்லி கொண்டுத்தான் இருக்கிறோம். அது சரியில்லை என்றால் திருத்தியும் கொள்கிறார்கள்”

கே.எஸ் அழகிரி

“நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை சீட்டுக்கள் எதிர்பார்க்கிறது?”

“இது கட்சியின் தலைமை முடிவு செய்யும். முன்பை விட அதிகமாக பெறும் என்பது எங்கள் நம்பிக்கை”

“அப்படி கிடைக்கவில்லை என்றால் அ.தி.மு.க-வின் மெகா கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து கொண்டிருக்கிறது என்கிற ஒரு பேச்சும் அடிப்படுகிறதே?’

“அ.தி.மு.க-வால் மதசார்பின்மையாக இருக்க முடியாது. அவர்களால் மோடியை தவிர்த்து விட்டும் அரசியல் செய்ய முடியாது. எனவே இது போன்ற பேச்சுக்கள் எல்லாம் யூகங்களின் அடிப்படையில் வருபவை”

ஆறு பேர் விடுதலை

“ஆறு பேர் விடுதலையை ஒட்டி, ‘கோவை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இஸ்லாம் சிறைவாசிகளுக்கு ஒரு நியதியா’ என்று கேள்வி எழுப்பி இருந்தீர்கள். ஏன் இப்போதுதான் அவர்கள் சிறையில் இருப்பது காங்கிரஸுக்கு தெரிந்ததா?”

“ஒரு விஷயத்தை பேசும் போதுதானே அதனோடு தொடர்புடைய எல்லா விஷயங்களையும் பேச முடியும். அதேநேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை, தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுங்கள் என்று காங்கிரஸ் ஒருபோதும் சொல்லாது. ஆனால் சந்தேகத்தின் பெயரில் 20 வருஷம் வைத்திருப்பதில் என்ன அர்த்தம். ஏன் சந்தேகத்தை நிரூபிக்க முடியவில்லை. அப்படி என்றால் அவர்களையும் விடுவிக்கலாமே என்கிற கேள்வியைத்தான் இப்போது இந்த விடுதலையை ஒட்டு கேட்கிறோம். இஸ்லாம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது”

கே.எஸ் அழகிரி

“தமிழ் நாட்டில் இனி வரும் தேர்தலில் தி.மு.க VS பா.ஜ.க என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?”

“அது ஒருபோதும் கிடையாது… தமிழ்நாட்டு அரசியல் தெரியாதவர்கள், தமிழ்நாட்டின் வாக்கு வங்கி தெரியாதவர்கள், சும்மா நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு வக்கணையாக சொல்கிற விஷயம் இதெல்லாம்”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.