சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறுவை சிகிச்சை நடைமுறைகள் குறித்தான கையேட்டை வெளியிட்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன் “அறுவை சிகிச்சை குறித்தான ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சைக்கான நெறிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையின் பொழுது கையாள வேண்டிய விதிமுறைகள் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்கள் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கையேடு அடுத்த வாரத்திற்குள் அனைத்து அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கும் கிடைக்கும்.
அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் இறப்புகள் குறித்து தணிக்கை செய்ய அரசு மருத்துவமனைகளில் தணிக்கை குழு செயல்படுகிறது. இந்த குழுக்களின் அறிக்கையை ஆய்வு செய்வது, சர்ச்சைகளுக்கு உள்ளாகும் அறுவை சிகிச்சைகளில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளை தனி கவனம் செலுத்தி ஆராய்வதற்காக மண்டல தணிக்கை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த குழுக்களில் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ நிபுணர், மயக்கவியல் நிபுணர், எலும்பு சிகிச்சை நிபுணர் என நான்கு உயர் மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நோயாளிகள் இறந்ததற்கான காரணங்களை கண்டறிந்து அடுத்த முறை அவ்வாறு நடைபெறாமல் இருக்கவும், சிறப்பாக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முறையை மற்ற மருத்துவர்களும் பின்பற்ற அறிவுறுத்துவார்கள். முதற்கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மண்டலங்களில் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது என்ன செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.