காப்பீட்டு நிறுவனங்களின் புதிய விதிமுறையால் விவசாயிகளுக்கு பாதிப்பு; 70 % சேதம் இருந்தால் மட்டுமே பயிர் காப்பீட்டுக்கு இழப்பீடு

* அதிக ஆபத்து மண்டலமாக திருச்சி அறிவிப்பு
* 48,293 பேரில், 16,587 பேருக்கு மட்டுமே இழப்பீடு

திருச்சி: விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலம் இழப்பு ஏற்படும் சமயங்களில் அந்த இழப்பீட்டை ஈடுசெய்ய தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு விதிமுறைகளை மாற்றியமைத்து, விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை செலுத்தாமல் இருக்க எந்த வகையில் தட்டிகழிக்கலாம் என்று பார்ப்பதாக விவசாயிகள் மத்தியில் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளின் பயிர் காப்பீட்டிற்கான தொகை தனியார் நிறுவனங்களிடம் இருந்து வந்துவிட்டதா? இல்லையா,? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட வேளாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்ட காப்பீடு பட்டியலில் திருச்சியை பொறுத்தவரை சென்ற ஆண்டு ஒட்டுமொத்தமாக 48,293 விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்தனர். இவர்களில் வெறும் 16,587 பேர் மட்டுமே காப்பீட்டுக்கான பலனை பெற்றுள்ளனர். அதில் நெல் விவசாயிகளைப் பொறுத்தவரை மொத்தம் 25,396 காப்பீடு செய்தனர் அதில் வெறும் 7,914 மட்டுமே காப்பீட்டின் பலனை அடைந்துள்ளனர். பருத்தியை பொருத்தவரை மொத்தமாக 8,920 காப்பீடு செய்துள்ளனர் அதில் வெறும் 1,515 பேர் மட்டுமே பலன் பெற்றுள்ளனர். கோதுமையில் 13,977 காப்பீடு செய்தனர். அதில் வெறும் 7,198 பேர் பலன் பெற்றுள்ளனர்.

இதற்கான காரணம் குறித்து திருச்சி வேளாண்மைதுறை சார்பில் காப்பீடு நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அவர்கள் திருச்சி மாவட்டத்தை அதிக ஆபத்தான மண்டலம் என அறிவித்துள்ளதாகவும், எனவே 70 சதவீத சேதம் இருந்தால் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இதுவரை அதிக ஆபத்தான மண்டலமாக இருந்தது நாகப்பட்டினம் மட்டுமே. தற்போது திருச்சி மாவட்டமும் அதில் சேர்ந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த 2021 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அளவுக்கு அதிகமான மழை பெய்து பெரும்பாலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதோடு, பயிர்களும் முற்றிலும் அழிந்தது.

எனவே கடந்த ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை பல கோடி என்பதால், அதனை மறைக்கவே தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் இந்தாண்டு இப்படிபட்ட புதிய விதியை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு வழங்க வேண்டிய காப்பீடு தொகையை கொடுப்பதற்கு முன்பாகவே இந்த விதியை செயல்படுத்தி தற்போது காப்பீடு செய்த 48,293 பேரில், 16,587 பேருக்கு மட்டும் காப்பீடு இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. இதற்கு முன்பு 50 சதவீதம் பாதிப்பு இருந்தாலும் காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும். ஆனால் தற்போது காப்பீடு நிறுவனங்களும் தங்களுடைய பங்கிற்கு விவசாயிகளை ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்… அரசே பயிர் காப்பீடு செய்ய வேண்டும். தனியார் காப்பீடு நிறுவனங்கள் புதிய விதிமுறைகளால் விவசாயிகளின் இழப்பை ஈடுகட்ட முன்வருவதில்லை. எனவே மாநில அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்தால் தான் தமிழக விவசாயிகள் காப்பாற்றப்படுவார்கள் என்று தெரிவித்தனர். அதேபோல் ஒரு தனி விவசாயி தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு அதில் இயற்கை சீற்றங்களினால் பாதிப்பு ஏற்பட்டு அறுவடையின் போது அந்த நிலத்தில் இருந்து 21 மூட்டைகளுக்கு மேல் உற்பத்தி பெறப்பட்டால் அந்த விவசாயிக்கும் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.

எனவே காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு புதிய விதிமுறைகளை செயல்படுத்தி, அதை முறையாக விவசாயிகளுக்கு அறிவிக்காமல், இழப்பீடு வழங்கப்படும்போது இதுபோன்ற தகவல்களை கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பெயரளவில் மட்டுமே இழப்பீட்டு தொகை
திருச்சியை பொறுத்தவரை சென்ற ஆண்டு ஒட்டுமொத்தமாக 48,293 விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்தனர். இவர்களில் வெறும் 16,587 பேர் மட்டுமே காப்பீட்டுக்கான பலனை பெற்றுள்ளனர். அதில் நெல் விவசாயிகளைப் பொறுத்தவரை மொத்தம் 25,396 காப்பீடு செய்தனர் அதில் வெறும் 7,914 மட்டுமே காப்பீட்டின் பலனை அடைந்துள்ளனர். பருத்தியை பொருத்தவரை மொத்தமாக 8,920 காப்பீடு செய்துள்ளனர் அதில் வெறும் 1,515 பேர் மட்டுமே பலன் பெற்றுள்ளனர். கோதுமையில் 13,977 காப்பீடு செய்தனர். அதில் வெறும் 7,198 பேர் பலன் பெற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.