ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வலக்கை நவ. 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. விலங்குகளை முன்னிலைப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள் விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளை மீறுகின்றனவா? என கேள்வி எழுப்பப்பட்டது.

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஒன்றிய அரசு காளைகளை விலங்குகள் காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டதன் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விலங்குகள் நலவாரியம் மற்றும் பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி கேஎம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்றது.    

பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார். ஜல்லிக்கட்டு, சக்கடி-க்கு ஆதரவாக தமிழ்நாடு, மராட்டிய அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவையா? ஜல்லிக்கட்டை கலாச்சாரம் என தமிழ்நாடு கருத முடியுமா? தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் கலாசார விதிகளின் கீழ் பாதுகாக்கப்படுகிறதா?, நாட்டு மாடு இனங்கள் இன வளர்ச்சிக்கு ஜல்லிக்கட்டு உதவுகிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பீட்டா அமைப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார். மேலும் விலங்குகளுக்கு தீங்கு இழைக்கப்படக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் நோக்கம் எனவும் லூத்ரா கூறினார்.

இந்நிலையில் இந்த வழக்கின் முதல்நாள் வாதம் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக வரும் நவ. 29ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் புதன் கிழமை அல்லது வியாழக்கிழமை தமிழகத்தின் சார்பில் வாதங்கள் முவைக்கப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.