மீண்டும் சிக்கலில் சமந்தா? யசோதா படத்தால் உருவான சிக்கல்!

இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் ஆகியோரது இயக்கத்தில் சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் ‘யசோதா’ படம் கடந்த நவம்பர் 11ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  இப்படத்தின் முதல் பாதியில் சமந்தா அப்பாவியான கிராமத்து பெண் போல நடித்து, இரண்டாம் பாதியில் அனைவரையும் அசத்தும் வகையில் அதிரடி பெண்ணாக மாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.  இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனில் சமந்தாவே தனக்கு குரல் கொடுத்து இருக்கிறார்.  பணத்தேவைக்காக வாடகைத்தாயாக வரும் பெண்களை வைத்து ஒரு கும்பல் சதி வேலை செய்கிறது, அந்த கும்பல் செய்யும் திட்டங்கள் ஒவ்வொன்றையும் வாடகைத்தாயாக இருக்கும் சமந்தா கண்டறிகிறார்.  

சமீபகாலமாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்துவரும் வரலக்ஷ்மி சரத்குமார் இந்த படத்திலும் வில்லியாக நடித்து வரவேற்பை பெற்றிருக்கிறார்.  ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்து இருக்கும் யசோதா படத்தில் சமந்தாவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், கல்பிகா கணேஷ், மாதுரிமா, திவ்யா ஸ்ரீபதா, ப்ரியங்கா ஷர்மா போன்ற பலர் நடித்திருந்தனர்.  ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்த இந்த படத்தை ஓடிடியில் வெளியிட தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது, இதன் காரணமாக இந்த படத்தை டிசம்பர் 19ம் தேதி வரை ஓடிடியில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.  

யசோதா‘ படத்தில் சமந்தா தங்கியிருக்கும் மருத்துவமனையின் பெயர் EVA என்று இருக்கும், இந்நிலையில் EVA IVF மருத்துவமனை ஹைதராபாத் சிவில் நீதிமன்றத்தில் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, தங்களது மருத்துவமனையின் பெயரை வைத்து யசோதா படம் தவறான வகையில் மருத்துவமனையை சித்தரித்து இருக்கிறது, இதனால் தங்கள் மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு இருக்கிறது என்று மருத்துவமனையின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.