பெய்ஜிங்: சீனாவில் நேற்று தொடர்ந்து 3-வதுநாளாக 30,000-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.
சீனாவில் மீண்டும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் 35,909 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3,405 பேருக்கு அறிகுறியுடன் கூடிய பாதிப்பும், 31,504 பேருக்கு அறிகுறியற்ற பாதிப்பும் இருந்தது. இது சீனாவின் தினசரி கரோனா பாதிப்பில் மிக அதிகமான அளவு. நேற்று உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
கடந்த வியாழக்கிழமை 32,695 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த புதன் கிழமை தினசரி பாதிப்பு 31,444 ஆக இருந்தது. இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 13-ம் தேதி அன்று சீனாவில் தினசரி பாதிப்பு 29,317-ஐ எட்டியதுதான் மிக அதிகளவாக இருந்தது குறிப்பிடத் தக்கது.
கரோனா தொற்றை முழு வதுமாக ஒழிக்க சீன அரசு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் பல மாதங்களாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில இடங்களில் கட்டுப்பாடுகளை மீறி சாலைகளில் போராட்டம் நடத்தினர். மேலும், ஐபோன் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏராளமான ஊழியர்கள் சுற்றுச் சுவரைத் தாண்டி தப்பினர்.
இதுகுறித்து சீன சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கரோனா பாதிப்புஏற்பட்டதிலிருந்து தற்போதுதான், சீனா மிகவும் கடுமையான மற்றும்சிக்கலான தொற்று பாதிப்பை சந்தித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.
தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் துணை இயக்குனர் லியு ஜியாஃபெங் கூறுகையில், ‘‘கரோனா தொற்றை எதிர்த்து போராடுவதில் மிகவும் சிக்கலான நிலையில் சீனா உள்ளது’’ என்று தெரிவித்தார். கரோனா தொற்றை முழுவதுமாக ஒழிக்க சீன அரசு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.