அமைதி பற்றி பேச காங்கிரசுக்கு உரிமையில்லை 2002ம் ஆண்டுக்கு பின் குஜராத்தில் கலவரம் இல்லை: தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பேச்சு

அகமதாபாத்: அமைதி பற்றி பேசுவதற்கு காங்கிரசுக்கு உரிமையில்லை என்றும், 2002ம் ஆண்டுக்கு பின் குஜராத்தில் கலவரம் ஏதும் நடக்கவில்லை என்று தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பேசினார். குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5  ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அகமதாபாத்தில் நடந்த பிரசாரத்தில் பேசுகையில், ‘காங்கிரஸ் அமைதியைப்  பற்றி பேசுகிறது; அது அவர்களுக்குப் பொருந்துமா? குஜராத்தில் அவர்கள் பல  ஆண்டுகளாக ஆட்சி செய்தார்கள். குஜராத் முழுவதும் வகுப்புவாதக் கலவரங்கள்  நடந்தன.

மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதுபோன்ற கலவரங்கள்  நடைபெறவில்லை. மதக் கலவரத்தைத் தூண்டும் காங்கிரஸுக்கு அமைதியைப் பற்றிப் பேச உரிமை இல்லை. கடந்த ​2002ம் ஆண்டுக்குப் பின் குஜராத்தில் ஒரு நாள் கூட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. குஜராத் பாதுகாப்பான இடமாக மாறியுள்ளது. காங்கிரஸ் கட்சி கிட்டதட்ட 30 ஆண்டுகளாக (1990 முதல் 2022 வரை) ஆட்சியில் இல்லை.

அவர்கள் குஜராத்திற்கு என்ன செய்தார்கள்? தற்போது குஜராத் தன்னிறைவு பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், மாநிலம் தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்கிறது. மாநிலம் முழுவதும் சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களிலும் 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.