ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், “காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய ஜெயலலிதாவின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும். தன்னலம் கருதாது, தமிழ்நாட்டு மக்களுக்காக தன் அறிவையும், உழைப்பையும் அர்ப்பணித்துப் பாடுபட்ட ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு கழகத்தினரின் இன்றியமையாத கடமையாகும். ஜெயலலிதாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாளான வருகிற 5ஆம் தேதி காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், கழக இடைக்காலப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். 

தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிட வளாகத்தில் திறந்த மேடை அமைத்து உறுதிமொழிகள் மேற்கொள்ளவும் உள்ளனர். இந்நிகழ்ச்சிகளில், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். 

ஜெயலலிதா நினைவு நாள் அன்று அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், ஆங்காங்கே ஜெயலலிதாவின் உருவப் படங்களை வைத்து, மலர் அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.