நாமக்கல் நகராட்சி 3-வது வார்டு பகுதியான சாய் நகர், பிருந்தா நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் கொள்ளையர்கள் இருவர் வீச்சு அரிவாளுடன் அப்பகுதிகளில் உள்ள வீடுகளின் ஜன்னல் மற்றும் கண்ணாடிகளை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். திருடர்களை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சத்தம் போட்டதை அடுத்து கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காட்சிகளில் இரண்டு திருடர்கள் அரை நிர்வாணத்துடன் முகமூடி அணிந்தவாறு கையில் வீச்சு அரிவாளுடன் வீடுகளின் ஜன்னல் வழியாக திருட முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி நாமக்கல் போதுபட்டி அடுத்துள்ள சரவணநகர், லட்சுமி நகர் போன்ற பகுதிகளில் இதே திருடர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்களிடம் நகையை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதன் பிறகு நேற்று சாய் நகர், பிருந்தா நகர்களில் கொள்ளை முயற்சியானது நடந்துள்ளது. தொடர்ந்து முகமூடி அணிந்து கையில் பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட்டு நபர்களால் நாமக்கல் நகரவாசிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, போலீசார் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.