மும்பை: திருமணத்திற்குப் பிறகு திரையில் காணாமல் போன புகழ்பெற்ற நடிகைகள் சிலர் குறித்து தற்போது பார்ப்போம்.
நம்ரதா ஷிரோத்கர்: 1993ல் மிஸ் பெமினாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆண்டுகளில் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர் நம்ரதா ஷிரோத்கர். அடியெடுத்துவைத்த வேகத்திலேயே இந்தி, பெங்காலி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என வலம் வரத் தொடங்கினார். வம்சி எனும் தெலுங்கு படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்தார் நம்ரதா ஷிரோத்கர். அந்த ஜோடி, நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தது. இதையடுத்து திரைத்துறையிலிருந்து பிரியா விடைபெற்றார் நம்ரதா ஷிரோத்கர்.
ட்விங்கிள் கண்ணா: பாலிவுட்டில் பாபி தியோல் ஹீரோவாக நடித்து 95 ல் வெளியான பர்சாத்தில் முதன்முதலாக தோன்றியவர் ட்விங்கிள் கண்ணா. ரொமாண்டிக் ஆக்ஷன் திரைப்படமான முதல் படத்திலேயே பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதை தட்டிச்சென்றவர் இவர். பாலிவுட்டின் பிரபல ஜோடி டிம்பிள் கபாடியா மற்றும் ராஜேஷ் கண்ணாவின் செல்ல மகள். பர்சாத் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த இவர், அக்ஷய் குமாரோடு இண்டர்நேஷனல் கில்லாடி(1999), ஜூல்மி (1999) ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர 2001ல் திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு திரையில் தோன்றவே இல்லை ட்விங்கிள் கண்ணா.
அசின்: மலையாளத்தில் 2001ல் முதன்முதலாக அறிமுகமானவர் அசின். படத்தின் பெயர் ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக’. அதன்பிறகு மலையாளத்தை மறந்துவிட்டு தெலுங்கு, தமிழ் என பிஸியானார். தமிழில் கமல், விஜய், அஜீத், சூர்யா போன்ற ஹீரோக்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர் அசின். கூடவே தெலுங்கில் ரவி தேஜா, பிரபாஸ் உள்ளிட்ட ஹீரோக்களோடும் நடித்தார். தமிழின் மாபெரும் வெற்றிப்படமான கஜினியில் சூர்யாவோடு நடித்ததன் தொடர்ச்சியாக பாலிவுட் கஜினியிலும் அமிர் கானுடன் ஜோடி சேர அதன்பின் பாலிவுட் வெள்ளித்திரையில் ஆதிக்கம் செலுத்தினார். அப்போதுதான் திடீர் அறிவிப்பாக 2016ல் தான் மைக்ரோமேக்ஸ் சிஇஓவான ராகுல் கண்ணாவை திருமணம் செய்துகொள்வதாக அறிவித்தார். புகழின் உச்சியில் இருந்தபோதே, சினிமாவை விட்டு விலகி குடும்பத் தலைவியாக மாறி புதிய வாழ்க்கையில் பயணிக்கத் தொடங்கினார்.
சோனாலி பிந்த்ரே: தமிழில் 99ல் வெளியான காதலர் தினம் படத்தில் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் என்று குணாலுடன் டூயட் பாடிய அதே சோனாலி பந்த்ரேதான் இவர். தமிழின் மருதுபாண்டி இந்தியில் 1994ல் ஆக் என்ற பெயரில் வெளியானபோது அதில் முதன்முதலாக தோன்றினார். தோன்றிய முதல்படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைத் தட்டிச்சென்று பாலிவுட்டை திரும்பிப் பார்க்கவைத்தார். அதன்பிறகு 30க்கும் மேற்பட்ட இந்திப் படங்கள். தமிழின் பாம்பே வில் ஹம்மா ஹம்மா பாடலில் ரசிகர்களை கிறங்கடித்த நடனக்கலைஞர் இவர். தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி என பிஸி ஷெட்யூலில் இருந்த இவரை, திரைப்பட இயக்குநர் கோல்டி பெல் கரம் பிடித்தார். அதன்பிறகு சினிமாவிலிருந்து விலகிய சோனாலி, சின்னச் சின்ன பாத்திரங்களில் எப்போதாவது தோன்றுகிறார்.