அமேதியில போட்டிப் போடறதைப் பத்தி இப்ப என்ன பேச்சு? கடுப்படிக்கும் ராகுல் காந்தி

இந்தூர்: தனது இமேஜைக் கெடுக்க பாஜக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ”என்னைப் பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். மக்களிடம் அது என் செல்வாக்கைக் குறைக்கும் என்று நினைத்தார்கள். மக்கள் அதை தவறு என்று நினைக்கிறார்கள், ஆனால் என்னிடம் உண்மை இருப்பதால் என் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் என்னை ஒன்றும் பாதிக்கவில்லை நான் சரியான திசையில் செல்கிறேன்” என்று ராகுல் காந்தி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தற்போது மத்தியப் பிரதேச மாநிலம் சென்றுள்ளார். அங்கு, இந்தூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டினார்.

ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராகுல் காந்தி, தனது இமேஜை களங்கப்படுத்த பாஜக அதிக அளவில் பணம் செலவழிக்கிறது என்று கூறினார். ஆனால் சரியான திசையில் செல்வதால், தனக்கு அவர்களின் செயலால் எந்த பாதிப்பும் இல்லை என்றும், இது உண்மையில் அவருக்கு நன்மை பயக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, பல இக்கட்டான கேள்விகளுக்கும் இயல்பாகவே பதில் அளித்தார். அமேதியில் போட்டியிடுவது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது பற்றி இப்போது கேள்வியே எழவில்லை என்றும், அது குறித்து ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.

தனது தற்போதைய கவனம் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வில் இருப்பதாக ராகுல் காந்தி கூறினார். கடந்த மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸின் ராகுல் காந்தியை, பாஜகவின் ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். 

2019 மக்களவைத் தேர்தலில் தனது குடும்பத்தின் கோட்டையான அமேதியில் ராகுல் காந்தியை மண்ணக் கவ்வ வைத்த ஸ்மிருதி இரானி, தற்போது மத்திய அமைச்சராக பதவியில் இருக்கிறார்.

ராஜஸ்தான் தலைவர்களான கெலாட் மற்றும் பைலட் ஆகியோர் தங்களது அதிகார மோதலுக்கு மத்தியில் பல்வேறு அறிக்கைகளை அளித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “எனது யாத்திரையை இது பாதிக்காது, இரு தலைவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு சிறந்த சொத்துக்கள்” என்று பதில் அளித்தார்.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்துக்குத் தீர்வு காண்பதற்கான திட்டங்கள் குறித்த கேள்விக்கு, தேசத்தின் மொத்தச் செல்வமும் மூன்று-நான்கு தொழிலதிபர்களின் கைகளில் அடைக்கப்பட்டிருப்பதுதான் தற்போதைய முக்கியப் பிரச்சினை என்று ராகுல் காந்தி கவலை தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.