இந்தோனேஷிய உலமாக்களுக்கு பாராட்டு| Dinamalar

புதுடில்லி,: ‘இஸ்லாமில் உள்ள சகிப்புத்தன்மை, அதன் மிதமான கொள்கைகள் ஆகியவற்றையும், பழமைவாதத்துக்கு எதிரான முற்போக்கு சிந்தனைகளையும் மக்களுக்கு போதிப்பதில், உலமாக்கள் எனப்படும் இஸ்லாமிய அறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்,” என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பாராட்டு தெரிவித்தார்.

‘இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும் மதங்களுக்கு இடையேயான அமைதி மற்றும் சமூக நல்லிணக்க கலாசாரத்தை வளர்ப்பதில் உலமாக்களின் பங்கு’ என்ற தலைப்பிலான நிகழ்வு, புதுடில்லியில் நடந்தது. இதில், தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் இருந்து வந்துள்ள உலமாக்கள், மற்ற மத அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த குழுவுக்கு இந்தேனேஷியாவின் அரசியல், சட்டம் மற்றும் உள்துறை அமைச்சகங்களின் ஒருங்கிணைப்பு குழு அமைச்சர் முகமது மஹ்பூத் தலைமை வகித்தார். இந்தக்குழுவின் பிரதிநிதிகள், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய கலாசார மையத்தின் பிரதிநிதிகள், இந்திய உலமா அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருடன் மத நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இந்த நிகழ்வை துவக்கி வைத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது:

இஸ்லாமில் உள்ள சகிப்புத்தன்மை, அதன் மிதமான கொள்கைகள் ஆகியவற்றையும், பழமைவாதத்துக்கு எதிரான முற்போக்கான சிந்தனைகளையும் மக்களுக்கு போதிப்பதில் உலமாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதில், நாம் பொதுவான சிந்தனையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இஸ்லாம் அமைதியையும், நல்வாழ்வையும் போதிக்கிறது. பயங்கரவாதம் என்பது, இந்த போதனைகளுக்கு எதிரானது. ஜனநாயகத்தில் வெறுப்பு பேச்சு, தவறான பிரசாரம், வன்முறை, மோதல் ஆகியவற்றுக்கு இடமில்லை. வன்முறைக்கு மதத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது.
இந்தியாவும், இந்தோனேஷியாவும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள். எல்லை தாண்டிய பயங்கரவாதமும், ஐ.எஸ்., போன்ற அமைப்புகளால் துாண்டிவிடப்பட்ட பயங்கரவாதமும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இந்த அச்சுறுத்தல்களை முறியடிக்க இரு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.