டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு காசியை அவமதித்த அமெரிக்க மாடல் அழகி: கண்டனம் எழுந்ததால் மன்னிப்பு கேட்டார்

வாஷிங்டன்: காசி குறித்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்ட அமெரிக்க மாடல் அழகி அபர்ணா சிங்கிற்கு கண்டனங்கள் எழுந்ததால், அவர் மன்னிப்பு கோரினார். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மாடல் அழகி அபர்ணா சிங், இந்தியாவின் ஆன்மீகத் தலைநகராகக் கருதப்படும் வாரணாசிக்கு சென்றார். அங்குள்ள நகைக்கடை உற்பாத்தியாளர்களை சந்தித்த அவர், ‘கழிவுநீரால் சூழப்பட்ட நதியின் நகரம் காசி – இந்தியா’ என்ற தலைப்பில் டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து நகரின் சுகாதாரமற்றப் பகுதிகளை வீடியோ எடுத்து பதிவிட்ட அவர், ‘மாசடைந்த கங்கை நதியில் மக்கள் குளிக்கின்றனர்.

ஓட்டலுக்குச் செல்லும் வழியில் இறந்த மனித உடல்கள் எரிக்கப்படுகின்றன. ஓட்டலைப் பாருங்கள், எவ்வளவு மோசாக இருக்கிறது. நதிக்கு செல்ல வேண்டுமானால் 40 படிக்கட்டுகள் வரை நடக்க வேண்டும்; அதற்கு தைரியம் வேண்டும்; பயமாகவும் இருக்கிறது. தெருவின் நடுவில் ஆங்காங்கே மக்கள் தூங்குகின்றனர். நாய்கள் கூட அப்படி தான் தூங்குகின்றன’ என்று கூறியுள்ளார். இவரின் பதிவிற்கு கிட்டத்தட்ட 10,000 பேர் கருத்துத் தெரிவித்து அபர்ணா சிங்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அபர்ணா சிங் சந்தித்த நகைக்கடை உரிமையாளரை சந்தித்த சிலர், புனித நகரத்தை அவமதித்த அபர்ணா சிங்கை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரினர். அதையடுத்து, அபர்ணா சிங் வெளியிட்ட மற்றொரு வீடியோவில், தான் வெளியிட்ட கருத்துகள் மக்களையும், நகரத்தையும் அவமதிப்பதாக கருதினால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.