ஆறிய சோற்றை கிளறிய அண்ணாமலை; அரசுக்கு ஆளுநர் ரவி பிறப்பித்த உத்தரவு!

சென்னையில் ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில், பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து இருந்தார்.

மேலும் இந்த விழாவில் 180 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்து இருந்தார்கள். இதையடுத்து பிரதமர் பாதுகாப்புக்கு தமிழக போலீசார் தேவையான ஏற்பாடு செய்து இருந்தனர்.

பிரதமர் மோடிக்கு செய்யப்பட்டிருந்த இந்த பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டு இருந்ததாகவும், பிரதமர் மோடி பாதுகாப்புக்கு முக்கிய உபகரணமாக இருக்க வேண்டிய மாநில அரசு வைத்திருந்த ‘மெட்டல் டிடெக்டர்’ கருவிகள் பல இடங்களில் வேலை செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக கையில் வைத்து இருக்க கூடிய மெட்டல் டிடெக்டர், டோர் மெட்டல் டிடெக்டர், கருவிகள் பழுது அடைந்து பராமரிப்பு இல்லாமல் பெயரளவுக்கு இருந்ததை சில இடங்களில் போலீசார் வைத்து இருந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுமார் 4 மாதங்கள் கழித்து பரபரப்பாக குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

மேலும் உலகிலேயே அதிகமாக அச்சுறுத்தல் இருக்கும் மனிதர் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடி தான். எனவே மோடி வந்தபோது தமிழகம் சரியான பாதுகாப்பை வழங்காதது ஏற்றுக்கொள்ள முடியாதது என, அண்ணாமலை ஏகத்துக்கு எகிறி உள்ளார்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கடந்த 29ம் தேதி அண்ணாமலை நேரில் சென்று சந்தித்து, பிரதமர் மோடி பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகிரங்கமாக மனு அளித்து உள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், ‘பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது அவரது பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்படவில்லை. பாதுகாப்பு சிறப்பான முறையில் செய்யப்பட்டு இருந்தது.

எஸ்பிஜி பாதுகாப்பு குழுவினர் எந்தவித குறையையும் சொல்லவில்லை. பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாக எஸ்பிஜி பாதுகாப்பு குழுவினர் வாய்மொழியாக கூறி விட்டு சென்றனர்.

அது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு காவல் துறையில் இருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் நவீனமானவை. அவ்வப்போது பழைய உபகரணங்களும் மாற்றப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு காவல் துறையில் பாதுகாப்பு உபகரணங்கள் இரு மடங்கு அதிகமாக உள்ளது. இவை நவீன மயமானதாக இருப்பதால் கேரளா மற்றும் அந்தமானில் இருந்து கூட நமது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வாங்கிச் செல்கின்றனர்’ என, டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம் அளித்தார்.

இந்த பரபரப்பான சூழலில் அண்ணாமலை அளித்திருக்கும் புகார் குறித்து விளக்கம் அளிக்கக் கூறி தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தபோது வேலை செய்யாத மெட்டல் டிடெக்டர் கருவி பயன்படுத்தப்பட்டதா? பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவான விளக்கம் வேண்டும் என்று, ஆளுநரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.