ஆனந்த்: சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர்களுடன் இணைந்து பணியாற்றியதால் காங்கிரஸ் கட்சி அடிமை மனப்பான்மையை உள்வாங்கி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆனந்த் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சொஜித்ரா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் கொள்கை ஒரு சமூகத்தை, ஒரு மதத்தை, ஒரு சாதியை மற்றதற்கு எதிராக நிறுத்துவதாகக் குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சியின் இத்தகைய கொள்கையால் குஜராத் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி அடிமை மனப்பான்மையை உள்வாங்கி இருப்பதாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரத்திற்கு முன்பாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து பணியாற்றியதால் அக்கட்சிக்கு இத்தகைய மனப்பான்மை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
குஜராத்தில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு நேற்று (டிச.1) முதற்கட்டத் தேர்தல் நடைபெற்றது. இதில், 59 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டத் தேர்தல் 93 தொகுதிகளுக்கு வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. நாளையுடன் இங்கு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இருக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.