ஆத்தீ ரூ.50 லட்சமாம்… வெள்ளலூர் சம்பவம்… ஒரு மாசம் டைம்… வார்னிங் கொடுத்த கோவை மேயர்!

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இங்கு குவியும் குப்பைகளால் நீர், காசு மாசுபாடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த சூழலில் மற்றொரு பெரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபற்றி தகவலறிந்து நேரில் வந்த கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கொந்தளித்து விட்டார்.

அடுத்த ஒன்றாம் தேதிக்குள் எல்லாம் மாறிவிட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படியென்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? சம்பவத்திற்குள் செல்வோம். வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு உட்பட்ட பகுதியில் அனுமதி பெறாமல் மாட்டுப் பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறதாம். இதில் 45க்கும் மேற்பட்ட மாடுகள் இருந்துள்ளன.

இது சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சென்று தினசரி மேய்ந்து விட்டு வருகிறது. இதன் உரிமையாளர் அருகிலுள்ள பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிகிறது. மேலும் உரிய ஒப்பந்தம் இல்லாமல் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது இரண்டு, மூன்று நிறுவனங்களின் பெயர்களைக் கூறி அவர்கள் மூலமாக தான் வேலைக்கு வந்திருப்பதாக தெரிவித்தனர். மூட்டை மூட்டையாக குப்பைகளை கொண்டு செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அனுமதி இல்லாமல் போர்வெல் போடப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் கண்டு மேயர் கல்பனா அதிர்ச்சி அடைந்தார். உடனே வெள்ளலூர் குப்பை கிடங்கு ஆய்வாளர் திருமால் மற்றும் இரண்டு பொறுப்பாளர்களை அழைத்து லெஃப்ட் ரைட் வாங்கி விட்டார். அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த மாட்டுப் பண்ணை, ஒப்பந்தமின்றி நடந்த வேலைகள் உள்ளிட்டவற்றால் மாநகராட்சிக்கு 50 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதை யார் தருவார்கள்? என்று கேள்வி எழுப்பினார். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? சம்பந்தப்பட்ட நபர்கள் யார்? என தடாலடியாக கேட்டார். அதற்கு, 4 கவுன்சிலர்கள் வந்து பார்த்துவிட்டு சென்றதாக திருமால் கூறினார். அவர்களின் பெயர்களை மேயர் கேட்டார். 99வது வார்டு கவுன்சிலர் அஸ்லாம், 96வது வார்டு கவுன்சிலர் குணசேகரன், 100வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், அஸ்லாமின் உறவினர் ஷாஜஹான் உள்ளிட்டோரின் பெயர்களை தெரிவித்தார்.

அனுமதியின்றி எப்படி இத்தனை நாட்கள் வேலை செய்துள்ளனர். ஆய்வாளர்களும், பொறுப்பாளர்களும் சரியாக கவனிக்க வேண்டாமா? அடுத்த ஒன்றாம் தேதிக்குள் எல்லாம் காலி செய்திருக்க வேண்டும் என்று வார்னிங் கொடுத்தார். முன்னதாக வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரத்தில் மேயர் பணம் கேட்டதாக வதந்திகள் கிளம்பின.

அதன் காரணமாக தான் நேரில் சென்று நடவடிக்கை எடுப்பது பற்றி பேசியதாக கூறப்பட்டது. ஆனால் களநிலவரம் அப்படியில்லை. மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என்றே மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆக்‌ஷனில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரம் கோவை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.