சுதந்திரம் பெற்ற நாள் முதல் பேருந்தே செல்லாத ஊருக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டதை அடுத்து, தங்கள் ஊரின் வழியாக வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கோட்டையேந்தல் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வரும் நிலையில் இந்த கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாள் முதல் இதுவரை எவ்வித அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து வசதியும் இருந்தது இல்லை.
இவர்கள் சாயல்குடி அல்லது ராமநாதபுரம் செல்ல வேண்டுமெனில் ஊரில் இருந்து 4 கிலோ மீட்டர் சென்று அங்கிருந்து இராமநாதபுரம் சாயல்குடி ECR சாலைக்கு சென்று பேருந்தில் செல்லும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், நீண்ட நாள் பேருந்து வேண்டி கோரிக்கையை முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான ராஜ கண்ணப்பனிடம் தங்கள் ஊரின் வழியாக ராமநாதபுரம் அல்லது சாயல்குடி சென்று வர பேருந்து ஏற்பாடு வசதி செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன்படி அமைச்சர் கோரிக்கை பரிசீலிக்க பட்டு இன்று சாயல்குடியில் இருந்து கோட்டையேந்தல் வழியாக வாலிநோக்கம் சென்று அதே வழியில் மீண்டும் செல்லும்படி புதிய வழித்தடம் (பெண்களுக்கு இலவசம்) தொடங்கப்பட்டது.
இதனை ஒட்டி கோட்டையேந்தல் கிராம மக்கள் வந்த பேருந்துக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் இட்டு, ஆரத்தி எடுத்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து, தேங்காய் உடைத்து வரவேற்றனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.