கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், கடந்த சில நாள்களுக்கு முன்பு வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு அனுமதி இல்லாமல் குப்பை அள்ளுவோர் குறித்து அதிகாரிகளிடம், ‘இதற்கு யார் பொறுப்பாளர்?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதார அலுவலர் திருமால்,

“இதை ஒழுங்குப்படுத்த முன்பே செந்தில் பாஸ்கர் என்ற உயரதிகாரிக்கு கடிதம் எழுதினேன். குப்பை அள்ளுவதை நிறுத்த சொல்லி உத்தரவு போட்டோம். கவுன்சிலர்கள் பெயர்களை சொல்லி உள்ளே வருகின்றனர்.” என அவர் கூறினார்.
“பெயரை சொல்லுங்க.” என்று மேயர் கல்பனா கேட்டதும் அவர் சற்றே தயங்கினார். “சார், நான் மேயர் கேட்கிறேன். பெயரை சொல்லுங்க.” என்று கேட்கவே, ‘100வது வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன், துணை மேயர் பெயரை சொல்கின்றனர்.’ என்று தயக்கதுடன் கூறினார். “குப்பைப் பொறுக்க டெண்டர் விடப்பட்டுள்ளதா.

அத்துமீறி குப்பைப் பொறுக்க உள்ளே அனுமதிக்கலாமா?” என்று மேயர் கல்பனா தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.
“அப்பாவிகளை வைத்து பிளாஸ்டிக், இரும்பு குப்பை எடுத்து திமுகவினர் தினசரி லட்சக்கணக்கில் பணம் பார்க்கின்றனர். இப்போது உள்கட்சி பூசலால் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏன் மேயரும், துணை மேயரும் ஒன்றாக ஆய்வு செய்யவில்லை?” என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து துணைமேயர் வெற்றி செல்வனிடம் விளக்கம் கேட்டபோது, “வயிற்று பிழைப்புக்காக சிலர் குப்பை அள்ளுகின்றனர். இதுவரை யாரும் டெண்டர் விடவில்லை.

அங்குக் குப்பை அள்ளுபவர்களுக்கு பாஸ் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. என் ஆள்களை விடுங்கள் என்று நான் எந்த அதிகாரியிடமும் பேசியதில்லை. அதிகாரிகள் எடுத்த வீடியோவை, சிலர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சித்தரித்து பரப்பி வருகின்றனர்.” என்றார்.
சுகாதார அலுவலர் திருமாலிடம் கேட்டபோது, “வாழ்வாதரத்துக்காக சிலர் குப்பை அள்ளுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். எங்களால் முடிந்தவரை இவர்களை ஒழுங்குப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

குப்பை அள்ள தடை விதித்திருந்தபோது சிலர் கவுன்சிலர்களிடம் பேசி உள்ளே வந்தனர். மேயர், அவர்கள் எந்த அடிப்படையில் வருகின்றனர் என கேட்டதால் நடந்ததை சொன்னேன். அவ்வளவுதான்” என்றார்.