தமிழகத்தில் கடந்த ஆக்டொபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து, பல மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி, அது, மேற்கு, வடமேற்கு திசைக்கு நகர்ந்து சென்று, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது.
அதன் பிறகு, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து நாளை காலை வட தமிழக கடலோர பகுதியின் அருகில் வந்தடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, 42 பாதுகாப்பு மையங்களுக்கும் தேசிய மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு, அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தழுவினால் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கன மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கனமழையை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட பத்து குழுக்கள் கடலூர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட பத்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த வகையில், கடலூர் மாவட்டத்திற்கு நேற்று மாலை அரக்கோணத்திலிருந்து கமாண்டர் குல்ஜிந்தர் மூன் தலைமையில் இருபத்தெட்டு பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்தனர். அவர்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள குடிகாட்டில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அங்கு இவர்கள் குழுவாக பிரிக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள சில முக்கிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மழை வெள்ளம் பாதிக்கும் இடங்களில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இதை தவிர்த்து, கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் பகுதியாக 278 இடங்கள் கண்டறியப்பட்டு்ள்ளன. அதன்படி, அந்தபகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு, 42 புயல் பாதுகாப்பு மையங்கள், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
அந்த மையங்களில், குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைப்பதற்கு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு முன்பாகவே, கடலூர் மாவட்ட மீனவர்களை மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதனால், அவர்கள் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லாமல், தங்கள் படகுகளை துறைமுகத்திலும், கடற்கரையோரமும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கன மழையை எதிர்கொள்வதற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.