உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் முறையாக பெண் சோப்தார் நியமிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் பெண் சோப்தாராக திலானி என்பவர் கடந்த ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முதல் பெண் சோப்தாராக லலிதா நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி, சேம்பரிலிருந்து நீதிமன்றக் கூடத்துக்குச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் இடையூறு இல்லாமல் செல்வதற்காக, `சத்தம் போடாதீர்கள்!’ என்று சைகையில் சொல்லியபடி வெள்ளைச்சீருடை, தேசியச்சின்னம் பொறுத்தப்பட்ட சிவப்புநிறத் தலைப்பாகை அணிந்து வெள்ளிச் செங்கோலை ஏந்திக்கொண்டு நீதிபதிக்கு முன் சோப்தார் செல்வார். அந்த நேரம் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஒதுங்கி நின்று நீதிபதிக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்பது மரபு. நீதிபதி பணி முடிந்து செல்லும்வரை அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதுதான் சோப்தாரின் பணி.

உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் நீதிபதி மாலா அவர்களுக்கு லலிதா சோப்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த பட்டதாரியான லலிதா, ’இந்தப் பணியில் சேர்ந்தது பெருமையாக இருக்கிறது’ என்பதாகத் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல் பெண் சோப்தார் நியமிக்கப்பட்டபோது, “பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவான பிற்போக்குத்தனமான சோப்தார் நடைமுறை இப்போது தேவைதானா?” என்று சமூகச் செயற்பாட்டாளர்களும் வழக்கறிஞர் சிலரும் குரல் எழுப்பினார்கள்.
“அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்ற குரல் சமூகத்தில் பலமாக ஒலிக்கும்போது அதைக் கேலிக்கூத்தாக்கும் விதமான இந்தச் சோப்தார் நடைமுறை இன்றுவரை தொடர்கிறது. இதில் பெண் சோப்தார் நியமிக்கப்பட்டதை எப்படி வரவேற்க முடியும்” என்று முதல் பெண் சோப்தார் நியமிக்கப்பட்டபோது ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.