வலுவடையும் புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்த 17 உத்தரவுகள்

சென்னை: புயல் எச்சரிக்கை காரணமாக அனைத்து துறைகளும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக 17 உத்தரவுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிறப்பித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (டிச.7) மாலை புயலாக வலுப்பெற கூடும் என்றும், இதன் காரணமாக 8, 9 மற்றும் 10-ம் தேதிகளில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 9-ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் முதலான மாவட்டங்களில் கனமழையும், 10-ம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், 11-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அனைத்து மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து 17 முக்கிய அறிவுறுத்தல்களை அவர் வழங்கி உள்ளார். இதன் விவரம்:

  • 1. கடந்த மழையின்போது தண்ணீர் அதிகம் தேங்கிய இடங்களில் மோட்டார்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • 2. உணவு மற்றும் எரிபொருளுக்கு தேவையான பணம் கையிருப்பு இருப்பதை மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • 3. இயந்திரவியல் துறை 50 டிராக்டர் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • 4. மண்டல கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும்.
  • 5. ஒவ்வொரு வார்டிலும் 10 பேர் கொண்ட ஒரு வாகனம் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • 6. நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • 7. வாகனம் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • 8. அனுமதி இல்லாத பேனர்களை அகற்ற வேண்டும்.
  • 9. மர அறுவை மற்றும் வெட்டி அகற்றும் சக்திமான் எந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • 10. மாநகராட்சியின் மின்சார துறை மின்வாரியத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
  • 11. சுரங்கப்பாதை மேட்டார் ஊழியர்கள் 24 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும்.
  • 12. காலை 7 மணி முதல் வண்டல் தொட்டிகளை தூய்மைபடுத்த வேண்டும்.
  • 13. தனியார் நிறுவனங்களின் தூய்மை பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • 14. மழைநீர் வடிகால் பணிகளை செய்த ஒப்பந்தாரர்கள் மேட்டார்களை தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • 15. அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும்.
  • 16. போதுமான மருந்துகள் மருத்துவமனைகளில் இருப்பு இருப்பதை உறுதி செய்து வேண்டும்.
  • 17. அதிக அளவு தண்ணீர் தேங்கும் இடங்களில் படகுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.