இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா காம்போவில் இதுவரை வெளியான வேல், சிங்கம் மற்றும் இந்த படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் இவர்கள் கூட்டணி இணைய திட்டமிட்டு அதன்படி கடந்த 2020ம் ஆண்டில் புதிய படத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டனர். இப்படத்திற்கு ‘அருவா’ என்று தலைப்பும் வைக்கப்பட்டது, பூஜையுடன் இப்படத்திற்கான பணிகள் ஆரம்பமானது, ஆனால் ஆரம்பமான கொஞ்ச நாளிலேயே கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால் படத்தின் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல்களின்படி நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டு இருந்த இந்த படத்தின் பணிகளை மீண்டும் தொடங்க சூர்யா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆக்ஷன் திரைப்படமாக உருவாகப்போகும் ‘அருவா’ படத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார். சூர்யாவின் ஒரு கதாபாத்திரத்திற்கு ராக்ஷி கண்ணா ஜோடியாகவும், சூர்யாவின் மற்றொரு கதாபாத்திரத்திற்கு பூஜா ஹெக்டே ஜோடியாகவும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இயக்குனர் ஹரியின் படங்கள் கோயம்புத்தூர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி போன்ற பகுதிகளை மையப்படுத்தி எடுக்கப்படும். அதேபோல இந்த முறை ‘அருவா’ படம் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் காட்சிப்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தான் நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒப்பந்தமாகி இருந்த ‘வணங்கான்’ படத்திலிருந்து வெளியேறினார், இந்த படம் மீண்டும் மற்றொரு புதிய கதாநாயகனை வைத்து உருவாக்கப்பட இருக்கிறது. தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இலங்கை பகுதியில் படமாக்கப்பட உள்ளது. இந்த படம் தெலுங்கில் வெளியான மாவீரன் படத்தை போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது.