போதைப்பொருள் கும்பலுடன் திமுக எம்.எல்.ஏ-வுக்கு தொடர்பா?- முகநூலில் பதிவிட்ட பாஜக நிர்வாகிமீது புகார்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே வேதாளை கிராமத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக சொகுசு காரில் கேன்களில் அடைத்து கொண்டு செல்லப்பட்ட மர்ம பவுடரை மண்டபம் மரைன் போலீஸார் வாகனச் சோதனையின்போது கண்டுபிடித்து கைப்பற்றினர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கீழக்கரை 19-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சர்பாஸ்நவாஸ், முன்னாள் தி.மு‌.க கவுன்சிலர் ஜெயினுதீன் ஆகிய இருவரைப் பிடித்து கடத்தப்பட்ட பவுடருடன் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்டிருப்பது போதைப்பொருளா என்பதைக் கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கடத்தப்பட்டது போதைப்பொருள்தான் என தகவல் காட்டு தீ போல பரவவே, பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தி.மு.க-வுக்கு எதிராக இந்த விவகாரத்தை பூதாகரமாக்கின. இதையடுத்து உடனடியாக மரைன் எஸ்.பி கடத்தப்பட்டது போதைப்பொருள் அல்ல உரம்தான் என அவசர, அவசரமாக செய்திக்குறிப்பு வெளியிட்டார். தற்போது வரை கடத்தப்பட்டது போதைப்பொருளா, உரமா? என்பதில் மர்மம் நீடித்து வருகிறது.

மாவட்ட எஸ்.பி அலுவலகம்

இந்த நிலையில், ராமநாதபுரம் பா.ஜ.க ஒன்றியத் தலைவர் முத்துலிங்கம் தனது முகநூல் பக்கத்தில், கடத்தலில் ஈடுபட்ட தி.மு.க கவுன்சிலர்களுடன், ராமநாதபுரம் தி.மு.க மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து, “போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தி.மு.க மாவட்டச் செயலாளர். போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்குகிறாரா காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்? விளக்கம் தருவாரா தமிழக முதல்வர் ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பதவி தப்புமா?” எனப் பதிவிட்டிருந்தார். இது ராமநாதபுரம் தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ராமநாதபுரம் தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம், எம்.எல்.ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பி வரும் முத்துராமலிங்கம்மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

முத்துலிங்கம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த படம்

இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச்செயலாளர் விஜய் கதிரவன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, “ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பற்றியும், மு.க.ஸ்டாலினை பற்றியும் சமூக வலைதளங்களில் பொய் பிரசாரங்களை பரப்பி வருகின்றனர். அவர்கள்மீது எஸ்.பி-யிடம் புகார் அளித்திருக்கிறோம். இந்த பொய் பிரசாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் 2.0 வேகத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

மாவட்டச் செயலாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில் இது போன்ற கேவலமான அரசியல் செய்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பா.ஜ.க கும்பல் இந்த பொய் பிரசாரத்தை பரப்பி வருகிறது. அதற்கான ஆதாரங்களை மாவட்ட கண்காணிப்பாளரிடம் அளித்திருக்கிறோம்.

முகநூல் பதிவு

இது குறித்து முத்துலிங்கத்தை தொடர்பு கொண்டு பேசினோம். “போதைப்பொருள் கடத்தலில் மாவட்டச் செயலாளருக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவர் தலைமுறைவாக உள்ளதாகவும் சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். அதுமட்டுமின்றி கடந்த இரு வாரங்களாக எம்.எல்.ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அப்போதுதான் கடத்தல் கும்பலுடன் அவர் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. அதனை எனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டேன். தவறு செய்யவில்லை என்றால் வெளிப்படையாக அறிக்கை விடலாம், அல்லது குற்றமற்றவன் என நிரூபிக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதனை செய்யாமல் இப்படி மறைந்து வாழ வேண்டிய அவசியம் என்ன? இது குறித்து என் மீது என்ன புகார்கள் கொடுத்தாலும் அதனை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.