ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பொதுவெளியில் மரண தண்டனை விதிப்பு

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன்பிறகு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி சிறுபான்மையினரின் ஷரியத் சட்டத்தின் படியே ஆட்சி நடைபெறும் என்று அறிவித்தனர். பொதுமக்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதனை பின்பற்றி வருகின்றனர்.

குறிப்பாக, பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்தனர். தொடக்கக் கல்வியில் பெண்களுக்கு அனுமதி அளித்தும் மேல்நிலைக் கல்வியை மறுத்தனர். பொது இடங்களுக்கு ஆண்கள் துணையின்றி பெண்கள் தனியாகச் செல்வதற்கும் தடை. இது போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு வறுமை, பசி, நோய் போன்ற சமூகப் பிரச்சினைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று நீதிமன்றங்களிலும் அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும் அவரின் மரண தண்டனையை ஆப்கானிஸ்தானின் தெற்கு கந்தஹார் மாகாணத்தைச் சேர்ந்த தலிபானின் தலைவரும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாலும் குற்றவாளிக்கு பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது தலிபானின் முக்கிய தலைவர்களும் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்தை தலிபானின் செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்தி உள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக உலகம் முழுவதிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தலிபான்களுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பொதுவெளியில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இச்சம்பவம் 90-களில் நடைபெற்ற தலிபான் ஆட்சியை மீண்டும் நினைவூட்டுவதாக பொதுமக்கள் குற்றாம்சாட்டி உள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.