தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்! குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர்…

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக போக்குவரத்து தொடர்பாக கடந்த 24மணி நேரத்தில் வெவ்வேறு வகையான தகவல்கள் வெளியிடப்பட்டு மக்களை குழப்பி வந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், விழுப்புரத்தில் பேருந்துகள் இங்யகாது என்று முதலில் அறிவிக்கப்பட்டு, பின்னர் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் மற்றொரு அறிவிப்பில் சென்னையில் இரவு பேருந்து இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் குழம்பி உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்.

பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, மாண்டஸ் புயல் கரையை கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.

மேலும், அந்தந்த மாவட்ட எல்லைகளுக்கு உள்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தொடர்பில் இருந்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, கண்காணித்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாண்டஸ் புயலானது கரையை கடக்கும் தருணத்தில், பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்குமாறு அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.