மாண்டஸ் புயல்: அடுத்து என்ன நடக்கும்? – தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாண்டஸ் தீவிர புயல் என்ற நிலையிலிருந்து இன்று காலை வலுவிழந்தது. இதனால் தற்போது மாண்டஸ், வெறும் புயலாக சென்னைக்கு தெற்கு தென் கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று இரவு முதல் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுவைக்கும் ஸ்ரீகரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கும். இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.
image
கன மழைக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருபத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும். தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், டெல்டா ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
புதுவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. நாளை (10.12.2022) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருபத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் மற்றும் சென்னையில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
image
காற்றுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று மதியம் முதல் மாலை வரையில் பலத்த காற்று, மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சில சமயங்களில் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மாலை முதல் நாளை அதிகாலை வரையில் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வரையிலும் சமயங்களில் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை அதிகாலை முதல் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் குறைந்து நாளை மாலை 30 முதல் 40 சில சமயங்களில் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென் தமிழக கடலோர மன்னார் வளைகுடா பகுதிகளை பொறுத்தவரையில் இன்று மாலை துவங்கி நாளை அதிகாலை வரை பலத்த காற்று, மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் சில சமயத்தில் 70 கிமி. வேகத்திலும் வீசக்கூடும்.
image
மீனவர்கள் 10 ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள், புயல் கரையை கடந்த பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது கரையை கடந்த மூன்று மணி நேரத்தில் வலு விழக்கக் கூடும். அதன் காரணமாக வட தமிழகத்தில் உள் பகுதிகளில் கர்நாடக பகுதிகளில் கன முதல் மிக கனமழை ஒரிரு இடங்களில் பெய்யக்கூடும்” என தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.