ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்குவதும், மறுப்பதும் காவல் துறையினுடைய தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், கோவை காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர்களின் கூலி உயர்வை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும், அதற்காக வால்பாறையிலிருந்து கோவை வரை ஊர்வலமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வால்பாறை காவல் நிலையத்தில் அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து வால்பாறை திராவிட தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எஸ்.கல்யாணி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட எஸ்பி வி.பத்ரி நாராயணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கல்யாணி என்பவர் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், 105 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலம் செல்ல அனுமதி கேட்பதாகவும், அதற்கு உரிய பாதுகாப்பு அளிப்பது சிரமம் என்றும் தெரிவித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது மற்றும் கோவையில் கார் வெடிப்பு சம்பவம் ஆகியவற்றால், தற்போது கோவையில் ஊர்வலம் நடத்த தகுந்த சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் அடர்ந்த வனப் பகுதி வழியாக செல்லும்போது, வன விலங்குகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதன் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிப்பட்டதாகவும் தெரிவித்தார். இவற்றின் அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவித்தார்.
காவல்துறையின் விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி வி.சிவஞானம், அந்தந்த பகுதிகளில் உள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஊர்வலங்களுக்கு அனுமதி அளிப்பதும் அனுமதி மறுப்பதும் காவல் துறையினுடைய தனிப்பட்ட அதிகாரம் எனக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
