கோவை: தமிழத்தில் மழை பெய்யும் பகுதிகளில் கூடுதல் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர், மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறியது: ”தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில், மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக முதல்வர் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி பல்வேறு ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் வழங்கினார். ஜூன் முதல் அக்டோபர் வரை ஏறத்தாழ 44 ஆயிரம் பழுதடைந்த மின் கம்பங்களுக்கு பதில் புதிய கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன.
2 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. பகல் மற்றும் இரவு நேரங்களின் மின்வாரிய பணிகளுக்காக கூடுதலாக 11 ஆயிரம் பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையால் மின்விநியோகத்தில் எவ்வித பாதிப்புகளும் இல்லாத அளவுக்கு, முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
மின் வாரியத்தை பொறுத்தவரை, ஒட்டுமொத்தமாக வடகிழக்கு பருவமழையால் எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, மயிலாடுதுறையில் மழையால் சேதம் ஏற்பட்டது. 2,622 மின்கம்பங்கள் அங்கு பழுதடைந்திருந்தன. அங்கு மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தன. 36 மணி நேரத்துக்குள்ளாக சிறப்புப் பராமரிப்புப் பணிகளை செய்து 2,622 மின்மாற்றிகளிலும் சீரான மின்விநியோகம் வழங்கக்கூடிய அளவுக்கு சிறப்பான பணிகளை மின்வாரியம் செய்தது.
தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதோ, அந்தப் பகுதிகளுக்கு கூடுதல் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதற்கான உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. கோவையில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் அரசு திட்டங்கள் தடையின்றி தொடர்ந்து வழங்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.