“அட்டூழியம், அக்கிரமம், அநியாயம்… இதுதான் திமுக-வின் ஆட்சி!" – ராஜேந்திர பாலாஜி காட்டம்

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின்‌ அறிவிப்பின்படி விருதுநகர் மேற்கு மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி சேத்தூர் பேரூர் கழகம் சார்பில் தி.மு.க அரசின் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் உயர்த்தப்பட்ட மின்கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு கண்டன உரையாற்றி பேசினார். அப்போது அவர், “வருகிற 13, 14-ம் தேதிகளில் அனைத்து நகரம் மற்றும் ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. சிமென்ட், செங்கல் மணல், மண் என எல்லாவற்றின் விலையும் கூடிவிட்டது.

கலந்துகொண்டவர்கள்

பாழாய் போன தி.மு.க ஆட்சியில் பால் விலையும் கூடிவிட்டது. இந்த ஆட்சியில், வீடு கட்ட நினைத்தாலும் வீடு கட்ட முடியவில்லை. வேலைக்கு ஆள்பற்றாக்குறை உள்ளது. வேலை பார்ப்பவர்களுக்கு சரியான ஊதியம் கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு இன்றைக்கு தமிழகத்தில் மிகவும் பெரிய பொருளாதாரப் பிரச்னை நிலவுகிறது. உணவுப்பொருள்கள், கட்டுமான பொருள்கள், ஆவின் பால் விலை, சொத்து வரி அனைத்து விலைகளும் கூடிவிட்டது. 500 ரூபாய் சொத்து வரி கட்டியவர்கள், இன்று 900 ரூபாய் கட்டி வருகின்றனர். 5,000 ரூபாய் சொத்து வரி கட்டியவர்கள் இன்று 8,000 ரூபாய் வரி கட்டுகின்றனர். தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த குறுகிய காலக்கட்டத்தில் தி.மு.க ஆட்சியில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பவனி வருகன்றார். அவர், இறங்கிச்சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிய வேண்டும். தி.மு.க ஆட்சியில் மக்கள் விரக்தியின் விளிம்பில் வாழ்கின்றனர். 10 ஆண்டுக்காலம் அ.தி.மு.க ஆட்சியில் எந்த விலைவாசியும் உயர்த்தப்படவில்லை.

ஆனால், இன்றைய தி.மு.க ஆட்சியில் கழிவுநீர் வெளியேற்றும் கட்டணத்தைக்கூட உயர்த்தி விட்டனர். கரன்ட் பில்லை கேட்டாலே ஷாக் அடிக்கும் அளவிற்கு அதன் கட்டணத்தையும் உயர்த்தி விட்டனர். இந்த நிலையில் கரன்ட் பில் உயர்வை கட்டுப்படுத்த மின்வெட்டையும் தி.மு.க அரசு அவ்வப்போது பயன்படுத்தி வருகிறது. மக்களுக்கு, சுபிட்சமான, சுகமான நல்லாட்சியை கொடுத்தது அ.தி.மு‌க. அப்படிப்பட்ட ஆட்சி மீண்டும் வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் மிகப்பெரிய பந்தா கிடையாது, பட்டாபிஷேகம் கிடையாது. ஆனால் இன்றைய தி.மு.க ஆட்சியில், ராஜபாளையத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினின் வருகையையொட்டி போக்குவரத்து முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். பள்ளிக்கூடத்திற்கும் விடுமுறை விட்டுள்ளனர். இப்படிப்பட்ட நிலைமைதான் தி.மு.க ஆட்சியில் உள்ளது. இது அட்டூழியம், அக்கிரமம், அநியாயம். ஆட்சி கிடைத்துவிட்டது என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாமென தி.மு.க செயல்படக்கூடாது. தி.மு.க-வின் இந்த ஆட்சிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தி.மு.க-வின் இந்த மக்கள் விரோத ஆட்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என கொதிப்புடன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.