செங்கல்பட்டு: மாண்டஸ் புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மாண்டஸ் புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள உணவகங்களை இரவு 10 மணிக்கு மூடவேண்டும். வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாகவும் , மக்களின் பாதுகாப்பிற்காகவும் இந்த தற்காலிக நிறுத்தம் செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சென்னை உட்பட 5 மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், ஆனால் பொதுமக்கள் பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் போக்குவரத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் வழக்கம்போல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தங்கள் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, மாண்டஸ் புயல் கரையை கடப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. மாண்டஸ் புயலானது கரையை கடக்கும் தருணத்தில், பொதுமக்கள் பேருந்து பயணத்தை முற்றிலும் தவிர்க்கும்படி கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை புயல் கரையைக் கடக்கும் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.