ஆன்லைன் ரம்மியால் ஊழியர், டிரைவர் தற்கொலை: கோவை, சேலத்தில் சோகம்

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள மேட்டுப்பாளையம் விஜிபி கார்டனை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் (22). தனியார் நிறுவன  ஊழியர். சல்மான் பெற்றோருக்கு தெரியாமல் அடிக்கடி தனது செல்போன் மூலமாக ஆன்லைனில் சூதாட்டத்தில் விளையாடி உள்ளார்.  அதில் அவர் பணத்தை இழந்தார். மேலும் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சல்மான் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனிடையே சம்பவத்தன்று சல்மான் வழக்கம்போல வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த கிணத்துக்கடவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சல்மான் தற்கொலை செய்வதற்கு முன்பு கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘‘நான் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆன்லைனில் சூதாட்டமாடினேன். அதில் சம்பள பணம் முழுவதையும் இழந்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்’’ என எழுதி இருந்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வாழப்பாடி:  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேசன்சாவடி அடுத்துள்ள காட்டுவேப்பிலைப்பட்டியில் உள்ள அம்மன் கோயில் கூரை விட்டத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கினார். தகவலறிந்த வாழப்பாடி போலீசார், சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பூமிநாயக்கன்பட்டி உத்தண்டி வளவு பகுதியைச் சேர்ந்த மணிமுத்து (40) என்பது தெரிய வந்தது. இவர் அங்கு டிரைவராக பணியாற்றிய நேரம்போக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். அதற்கு அடிமையானதில், பல லட்சம் பணத்தை இழந்தால் விரக்தியடைந்த மணிமுத்து,  தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.