சென்னை: சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நேற்று மாலையே துண்டிக்கப்பட்ட நிலையில், இன்னும் பல இடங்களில் மின்விநியோகம் செய்யப்படாத நிலை உள்ளது. மேலும் பெரும்பாலான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளால், அதை அகற்றும் பணி நடைபெற்று வருவதால், விரைவில் மின்விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். அதுபோல சைதைப்பேட்டை பகுதியில் மழைபாதிப்பை ஆய்வு செய்து வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை பாதிப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளனர்.
சென்னையை மிரட்டி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி அதிகாலை 2.30க்கு கரையைக் கடந்தது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும், இந்த மாண்டஸ் புயல் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட உள்மாவட்டங்கள் வழியாக கடந்து செல்லும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
மாண்டஸ் புயலின் அசுரவேகத்தால் சென்னையின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மரங்கள் முறிந்து விழுந்ததில் வீட்டின் சுவர், கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.
மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கியபோது, சென்னை முழுவதும் சூறைக்காற்று வீசியது. இதனால், பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் மின்சார கம்பங்கள் ஆங்காங்கே சாய்ந்து உள்ளன.
சென்னையில் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்திருக்கும் டிஜிபி அலுவலகம் முன்பாக சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றார்கள். சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான இந்த சாலை போக்குவரத்திற்கு மிகவும் முக்கியம் என்பதால் சாலையில் விழுந்து கிடந்த அந்த மரத்தை அகற்ற சென்னை மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அம்பத்தூரில் எம். சி. ராஜா தெருவில் மின்கம்பம் உடைந்து விழுந்து இருக்கிறது. கோயம்பேடு ஜெகநாதன் நகரில் அரும்பாக்கம் சாலையில் ராட்சச மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்திருக்கிறது. கோயம்பேடு தீயணைப்பு மீட்பு குழுவினர் சாலையில் விழுந்து கிடந்த மரத்தை மரம் வெட்டும் இயந்திரம் மூலம் வெற்றி அகற்றி இருக்கிறார்கள்.
திருவல்லிக்கேணியில் இந்து பள்ளிக்கூடம் அருகில் மரம் சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கிறது. சாந்தோம் சாலையில் மரம் கீழே விழுந்து உள்ளது. நேற்று இரவு நிலவரப்படி சென்னையில் 60க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் 5000 மாநகராட்சி ஊழியர்கள் பிடிப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
புயல் கரையை கடந்த போது, சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் காந்தி சிலை முதல் நேப்பியர் பாலம் வரை போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.
‘சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள கார்நிஸ்வரர் கோவில் குளத்தின் அருகில் நூறு ஆண்டுகள் பழமையான மரம், கோவில் குளத்தின் தடுப்பு சுவரைப் பெயர்த்து விழுந்துள்ளது.
கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலை, மயிலாப்பூர் ஈஸ்ட் டிரஸ்ட் சாலை, வில்லவாக்கம் இரயில் நிலையம் ,பேருந்து நிலையம், கோட்டூர் காந்தி புரம் சாலை,பெரம்பூர் இரயில் நிலையம், பெசன் நகர் ருக்மணி சாலை, ஆவடி சிவன் கோவில் சாலை, போன்ற பல்வேறு இடங்களில் சாலையோரம் இருந்த மரங்கள் பலத்த காற்றினால் சாலையில் முறிந்து விழுந்துள்ளன.
விபத்து நேரிட்டு வரும் இடங்களில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று மின்சார இயந்திரம் மூலம், முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை வில்லிவாக்கம் பகுதிகளில் கட்சியின் விளம்பர பலகைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளன.
கோட்டூர் பகுதியில் காந்திபுரம் சாலையில் பலத்த காற்றினால் சாலையோர இருந்த மரம் வீட்டின் தடுப்பு சுவர் மீது விழுந்ததால் தடுப்பு சுவர் முற்றிலும் சேதம் அடைந்து இடிந்து விழுந்துள்ளது. மரம் முறிந்து விழுந்ததால் தடுப்புச் சுவர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் பலத்த சேதமடைந்தது.
சென்னை பாரிமுனையில் மாண்டாஸ் புயல் காரணமாக மின்கம்பம் இடிந்து சாலையில் விழுந்த காரணத்தால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மின் கம்பத்துடன் மரமும் சேர்ந்து விழுந்ததால் அப்பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் துரிதப்படுத்தியுள்ளன.
பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளால், அதை அகற்றும் பணி நடைபெற்று வருவதால், விரைவில் மின்விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார். அதுபோல சைதைப்பேட்டை பகுதியில் மழைபாதிப்பை ஆய்வு செய்து வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மழை பாதிப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளனர்.
மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து நள்ளிரவு முதலே அமைச்சர்கள் களத்தில் இறங்கி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சார தலைமை அலுவலகத்தில் இருந்து பணிகளை முடுக்கிவிட்டார். 11 மின் ஊழியர்கள் களத்தில் உள்ளதாகவும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட மின்சார விநியோகம் விரைவில் சீராகும் என்று கூறினார்.
அதுபோல, அதிகாலையிலேயே மழைபாதிப்பு குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகஅரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதிப்புகள் இல்லை என்றும், ஏற்பட்டுள்ள சில பாதிப்புகளும் விரைவில் அகற்றப்படும் என்றார். மேலும் தாம்பரம் காசநோய் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால், அவர்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர் என்றும் கூறினார்.