நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவர் மோகன கிருஷ்ணன். அமைச்சுப் பணி அலுவலரான இவர் மீது சக பெண் பணியாளர்கள் பாலியல் புகார் அளித்திருக்கின்றனர். இந்த புகார் குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தலைமையில் குழு அமைத்து விசாரித்து வந்திருக்கின்றனர்.

சக பெண் பணியாளர்களிடம் அமைச்சுப் பணி அலுவலர் மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊட்டி நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோகன கிருஷ்ணன் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கைதான மோகன கிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து நீலகிரி காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “51 வயதான அமைச்சுப் பணி அலுவலர் மோகனகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். எஸ்.பி அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றி வந்த சக பெண் பணியாளர்களுக்கு பல ஆண்டுகளாகவே பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.

உயர் அலுவலர் என்பதால் பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்கள் வெளியில் சொல்ல பயந்து அமைதியாக இருந்து வந்திருக்கின்றனர். இதை தனக்கு சாதகமாக்கி கொண்ட மோகன கிருஷ்ணனின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் பணியாளர்கள் அளித்த புகாரின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்” என்றனர்.