டெல்லியில் ஜி-20 மாநாடு: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்பாரா?

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள ஜி – 20 சர்வதேச மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக, அந்நாட்டின் ஜி – 20 ஷெர்பா விளக்கம் அளித்து உள்ளார்.

ஜி – 20 உச்சி மாநாடு தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடந்தது. மாநாட்டு நிறைவு விழாவில் ஜி – 20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜி – 20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விஷயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி – 20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம். நாம் அனைவரும் இணைந்து ஜி – 20 அமைப்பை உலகளாவிய மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக உருவாக்குவோம். இந்தியாவின் ஜி – 20 தலைமைத்துவம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய, குறிக்கோள் நிறைந்த, முடிவான மற்றும் செயல் சார்ந்து இருக்கும்” என்று கூறினார்.

ரஷ்யா – உக்ரைன் போர்: கண்ணீர் விட்டு அழுத போப் ஃபிரான்சிஸ்!

இதன் பின்பு, ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்ப்பூரில் ஜி – 20 ஷெர்பாக்கள் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் கடந்த 4 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில், 40-க்கும் மேற்பட்ட ஷெர்பா குழுக்கள் வருகை தந்தன. அவர்களுக்கு மாநில பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜி – 20 மாநாட்டு தலைவர்களுக்கான கூட்டம் வருகிற 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதனை இந்திய அமைப்பாளர்கள் முறைப்படி அறிவித்து உள்ளனர்.

சர்வதேச அளவில் உக்ரைன் போர் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள சூழலில், இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்வாரா? என்ற கேள்விக்கு அந்நாட்டு தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. இது பற்றி ரஷ்ய ஜி – 20 ஷெர்பா குழுவின் தலைவரான ஸ்வெட்லானா லுகாஷ் அந்நாட்டு அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போது, “ஜி – 20 மாநாட்டுக்கு அதிபர் புடின் நிச்சயம் செல்வார் என நம்புகிறேன். ஆனால், இந்த விஷயத்தில் அவரே முடிவெடுக்க வேண்டும். அடுத்த மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அதனால், இதுபோன்ற கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. எனக்கு தெரிந்தவரை, அவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனைத்து வகையிலும் வாய்ப்புகள் உள்ளன” என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.